உலகக் கோப்பையை வென்றதற்கு தோனி மட்டுமே காரணமல்ல என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று இன்றோடு 9 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதுவம் இலங்கையை இறுதி ஆட்டத்தில் வீழ்த்த தோனி அடித்த சிக்ஸர் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதது.
இந்திய அணி இலங்கையை வீழ்த்தியதற்கு இறுதிப் போட்டியில் கவுதம் காம்பீரின் பொறுப்பான ஆட்டமும் காரணம். இந்தப் போட்டியில் கவுதம் காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தோனி 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பை வென்ற நாளை கொண்டாடிய "கிரிக்இன்ஃபோ" இணையதளம் தோனி இறுதிப் போட்டியில் சிக்ஸர் அடித்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அத்துடன் இந்த ஷாட், மில்லியன் இந்திய ரசிகர்களைக் கொண்டாட வைத்தது என எழுதியது.
இதற்கு பதிலளித்த காம்பீர் " உலகக் கோப்பையை ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திய அணியும் பயிற்சியாளர்களும் இணைந்துதான் வென்றார்கள். சிக்ஸர் மீதான உங்கள் அதீத விருப்பத்தைக் கைவிடவேண்டும்" என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக சரமாரியான விமர்சனங்களை காம்பீர் சமூக வலைதளங்களில் பெற்று வருகிறார்.