விளையாட்டு

பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து, ஆஸி. அணிகள் அபார வெற்றி

பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து, ஆஸி. அணிகள் அபார வெற்றி

webteam

உலகக் கோப்பை பயிற்சி போட்டியில், நேற்று நடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அபார வெற்றி பெற்றன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி, 38.4 ஓவர்களில் 160 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முகமது நபி 44 ரன், நூர் அலி ஜட்ரன் 30 ரன் எடுத்தனர். தவ்லத் ஜட்ரன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர், ஜோ ரூட் தலா 3 விக்கெட் டும், ஸ்டோக்ஸ், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து, 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 46 பந்துகளில் 89 ரன்னும், ஜோ ரூட் 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பேர்ஸ்டோ 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. சவுதம்டனில் நடந்த இந்தப் போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக திரிமன்னே 56 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்னும் எடுத்தனர்.  பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக அந்த அணியின் உஸ்மான் கவாஜா 89 ரன்னும், மேக்ஸ்வெல் 36 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக, பயிற்சி ஆட்டத்தில் பெற்ற 2-வது வெற்றி இது.