விளையாட்டு

காயமடைந்த கேதார் ஜாதவ் ! உலகக் கோப்பை அணியில் இணைகிறாரா ராயுடு ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான கேதார் ஜாதவ் நேற்றையப் போட்டியில் பீல்டிங் செய்யும்போது கீழே விழுந்ததில் காயமடைந்தார். இதன் காரணமாக இனி நடைபெறவுள்ள எஞ்சியப் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியிலும் கேதார் ஜாதவ் இடம் பெற்று இருப்பதால், அவர் உலகக் கோப்பை விளையாடுவதும் அணியில் நீடிப்பதும் சந்தேகம்தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். உலகக் கோப்பை நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பு, இந்திய அணியில் கேதார் ஜாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அம்பத்தி ராயுடு சேர்க்கப்படலாம் என்ற பேச்சும் இப்போது எழுந்துள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்  ட்விட்டரில் " ஐபிஎல் தொடரில் இனி ஜாதவ் பங்கேற்கமாட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டியது இருக்கிறது. நிலைமை மோசமில்லை, ஆனால் எதுவும் சரியாக இல்லை" என தெரிவித்துவிட்டார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், பீல்டிங் செய்து வந்த போது, 14வது ஓவரில் "ஓவர் த்ரோ" பந்தை பிடிக்க முயற்சி செய்த கேதார் ஜாதவ், கீழே விழுந்து தோள்பட்டையில் காயமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது.

இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாதவ் 162 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 58 ரன்களை ஒரே ஒரு போட்டியில் குவித்தார். மேலும் அவரின் சராசரி வெறும் 18 மட்டுமே. ஏற்கெனவே மோசமான பேட்டிங் பாஃர்மில் இருக்கும் ஜாதவ்க்கு இந்தக் காயம் பெரிய தலைவலியாகவே இருக்கும். மேலும், ஜாதவ்க்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் தன்மை தெரிந்த பின்பே, பிசிசிஐ அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும். ஜாதவ்வின் காயம் மோசமானால் ஏற்கெனவே ரிசர்வ் பட்டியலில் இருக்கும் அம்பத்தி ராயுடு அல்ல ரிஷப் பன்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு செல்லும்.

2019 உலகக் கோப்பை தொடருக்கான கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமத் ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்திய அணி அறிவிப்பில் அனுபவ வீரர் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். இதில் கடுப்பான அம்பத்தி ராயுடு, பிசிசிஐ கேலி செய்யும்விதமாக ட்வீட் போட்டு இருந்தார். இதனை பெரிதாக பிசிசிஐ எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அம்பத்தி ராயுடு, ஜாதவ்க்கு பதிலாக நிச்சயம் உலகக் கோப்பை அணியில் இணைவார்.