விளையாட்டு

பாகிஸ்தானை வெளியேற்ற இந்தியா அடுத்த போட்டிகளில் மோசமாக விளையாடும் - பாஸிட் அலி

பாகிஸ்தானை வெளியேற்ற இந்தியா அடுத்த போட்டிகளில் மோசமாக விளையாடும் - பாஸிட் அலி

rajakannan

இந்திய அணி அடுத்து வரும் போட்டிகளில் வேண்டுமென்றே மோசமாக விளையாடி தோற்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஸிட் அலி கூறியுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆஸ்திரேலியா மட்டுமே முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முதல் 5 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு போட்டியில் மழையால் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும், கடைசியாக நடைபெற்ற தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் உற்சாகமடைந்துள்ளது. அடுத்து வரும் ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்புள்ளது. 

ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் முதன் மூன்று இடங்களை எளிதில் பிடித்துவிடும் என தெரிகிறது. நான்காவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் உள்ளன. மற்ற அணிகள் அடுத்து வரும் போட்டிகளில் மோசமாக விளையாடி தோற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும்.

இந்திய அணி அடுத்து எதிர்கொள்ள இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அபார வெற்றி பெறும் பட்சத்தில் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். இந்திய அணி இந்த மூன்று அணிகளிடம் மோசமாக தோற்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கு பாதகமாக முடியும்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடனான போட்டிகளில் இந்திய அணி வேண்டுமென்றே மோசமாக விளையாடி தோற்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஸிட் அலி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதை இந்தியா விரும்பாது. இந்திய அணிக்கு அடுத்ததாக பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக போட்டிகள் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா எப்படி வென்றது என்பதை நாம் பார்த்தோம். அதேபோன்றே அடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் விளையாடலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன நடந்தது? இந்தியா வேண்டுமென்றே மோசமாக விளையாடியது. இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா எப்படி விளையாடியது? வார்னர் இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்?” என்று கடுமையாக விமர்சித்தார்.