விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: வெள்ளி பதக்கம் வென்று கோனெரு ஹம்பி சாதனை!

webteam

உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்குபெற்று விளையாடிய இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டரான கோனெரு ஹம்பி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடுகளை சார்ந்த தலை சிறந்த செஸ் வீரர்கள் கஜகஸ்தானில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். பெண்களுக்கான பிரிவில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் கோனெரு ஹம்பி வெள்ளிப்பதக்கத்திற்கான போட்டியில் தன்னுடைய பெயரை பதித்தார்.

இந்நிலையில் உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் வெள்ளி பதக்கத்திற்கான போட்டியில் பங்குபெற்ற, இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் கோனெரு ஹம்பி, 17 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 12.5 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரான கோனெரு ஹம்பி, உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்லும் முதல் பெண் செஸ் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் தவிர வேறு யாரும் ப்ளிட்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் இந்த தொடரில் பதக்கம் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை 6வது முறையாக வென்றார் மேக்னஸ் கார்ல்சன். 21 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 16 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் அரங்கில் உள்ள ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் என மூன்று பிரிவுகளிலும் உலக சாம்பியன் பட்டம் அவரிடம் உள்ளது.