உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் நிகோல்ஸ்(55), டாம் லதாம்(47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பிளங்கெட் மற்றும் கிரிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 242 என்ற இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அனுபவ வீரர் ஜோ ரூட் 30 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோவ் 36 (55) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 22 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய பட்லர், ஸ்டோக்ஸ்வுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதனாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. எனவே இங்கிலாந்து அணிக்கு கடைசி 10 ஓவர்களில் 72 ரன்கள் தேவைப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் விக்கெட்டிற்கு 110 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பட்லர் 60 பந்துகளில் 59 ரன்கள் அடித்து வெளியேறினார். அதன்பிறகு வோக்ஸ் 2 ரன்னில் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து பிளங்கெட் 9 ரன்னில் அவுட் ஆனார். அதன்பிறகு ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதி வரை ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தார். எனவே ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியை விட 6 பவுண்டரிகள் அதிகம் அடித்த காரணத்தால் இங்கிலாந்து நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இதன்மூலம் முதல் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது.