விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை: பலம் வாய்ந்த சாம்பியன்கள் மோதும் இறுதிப் போட்டி

மகளிர் உலகக் கோப்பை: பலம் வாய்ந்த சாம்பியன்கள் மோதும் இறுதிப் போட்டி

சங்கீதா

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும், 12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின.  மழை காரணமாக  ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதால் ஓவர்களின் எண்ணிக்கை 45 ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச, ஆஸ்திரேலிய அணி 45 ஓவர் முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. 

இதையடுத்து 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி, 37 ஓவரில் 148 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனைத்தொடர்ந்து 2-வது அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 293 ரன்களை குவித்தது. தொடக்க வீராங்கனை டேனி வியாட் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே, இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.

இதனால் 156 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 4 முறை கோப்பையை வென்றுள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.