தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரு பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி, முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி, இந்த தொடரில் எதிலும் தோல்வியைச் சந்திக்காது முதல் அணியாக, 8வது முறையாக உலகக்கோப்பை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது. இரண்டாவது அரையிறுதியில் வலுவான இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இவ்விரு அணிகளுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க பேட்டரான ஹீலே 18 ரன்களில் வெளியேறினாலும், பேத் மூனி வலுவாக இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அவர் 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடக்கம். இவருக்குத் துணையாய் கார்ட்னர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியில் இஸ்மாயில் மற்றும் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.
பின்னர் கடினமான இலக்கைக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. உலகக்கோப்பையை முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா வெல்லப்போகிறதா அல்லது 6வது முறையாக (மீண்டும் ஹாட்ரிக்) ஆஸ்திரேலியா தக்கவைக்கப்போகிறதா இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.
- ஜெ.பிரகாஷ்