விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை... இதுவரை டி20யில் இந்தியா நிகழ்த்திய சாதனைகள்!

மகளிர் டி20 உலகக்கோப்பை... இதுவரை டி20யில் இந்தியா நிகழ்த்திய சாதனைகள்!

webteam

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இடையே இதுவரை நடைபெற்ற போட்டிகளின் சில சுவாரஸ்ய நிகழ்வுகளை அறிந்துகொள்வோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் ஆடவர், மகளிர் என எந்த கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். தற்போது இவ்விரு அணிகளும் மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதலாவது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்காவில் இன்று சந்திக்க இருக்கின்றன. இதுகுறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ”இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் உலகக் கோப்பை போட்டி இன்னும் அதை சிறப்பானதாக ஆக்குகிறது” என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணியினருக்கு இடையே நடைபெற்ற கடைசி 5 டி20 போட்டிகளின் நிலவரம் குறித்து தெரிந்துகொள்வோம்.

டிசம்பர் 3, 2018இல் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஜூன் 9, 2018இல் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

நவம்பர் 11, 2018இல் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஜூலை 31, 2022இல் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கடைசியாக அக்டோபர் 7, 2022இல் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதன்படி பார்த்தால், கடைசி 5 போட்டிகளில் இந்திய அணி 4இல் வெற்றி பெற்றுள்ளது. தவிர, இந்தப் பட்டியல்படி முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றுள்ளது. இதில் கடைசியாய் அக்டோபர் மாதம் விளையாடிய போட்டியில் இந்திய அணி தோற்றுப்போயுள்ளது. அதற்கு இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் எனத் தெரிகிறது.

மேலும் இவ்விரு அணிகளுக்கான டி20 போட்டி சுவாரஸ்ய தகவல்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

டி20 போட்டியில் 2018இல் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி எடுத்த 137 ரன்களே அதிகபட்சமாக உள்ளது.

டி20 போட்டியில் 2012இல் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்களில் சுருண்டதே மிகவும் குறைந்தபட்ச ரன்களாகும்.

டி20 போட்டியில் 2016இல் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்ததே தனிநபரின் அதிகபட்ச ரன்னாகும்.

டி20 போட்டியில் 2009இல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா ராய் 5 விக்கெட்கள் வீழ்த்தியதே தனிநபரின் அதிகபட்ச சாதனையாகும்.

மேலும், இவ்விரு அணிகளும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் 4 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பையில் 6 முறை மோதியுள்ள இந்திய அணி அதில் 4 முறை வெற்றி கண்டுள்ளது. 2 முறை பாகிஸ்தான் வெற்றி கண்டுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கிடையே மொத்தம் 11 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் அனைத்திலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. அதுபோல் 13 டி20 போட்டிகளில் இந்தியா 10 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

- ஜெ.பிரகாஷ்