விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி!

மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி!

webteam

மகளிர் டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. அனுபவ வீராங்கனையான மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. இதற்கிடையே 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி, 19.3 ஓவரில் 112 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் அதிகப் பட்சமாக ஸிம்ருதி மந்தனா 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஹீதர் நைட், 2 ஓவர்கள் வீசி 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். 

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் எமி ஜோன்ஸ் 53 ரன்களும் நடாலி சிவர் 52 ரன்களும் எடுத்தனர். இந்த தோல்வியை அடுத்து இந்திய மகளிர் அணி, உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. 

(ஹர்மன்பிரீத் கவுர்)

தோல்விக்கு பின் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறும்போது, ’நாங்கள், என்ன மாதிரியான முடிவுகளை எடுத்தோமோ, அதெல் லாம் அணியின் வெற்றிக்காகத்தான். சில நேரம் அது கைகொடுத்தது. சில நேரம் கொடுக்கவில்லை. இதனால் வருத்தம் ஏதும் இல்லை. இந்த தொடரில் எங்கள் வீராங்கனைகள் விளையாடிய விதம் பெருமையாக இருக்கிறது. நாங்கள் இளம் அணி. இந்த தொடரில் நிறைய கற்றுக் கொண்டோம்’ என்றார்.