இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளரை சூதாட்டத்துக்கு அணுகியதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. போட்டிக்கிடையே பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓட்டலில் தங்கியிருந்த ஒரு பந்துவீச்சாளரை, ஜிதேந்திர கோத்தாரி, ராகேஷ் பாப்னா ஆகியோர், தாங்கள் டெல்லியை சேர்ந்த விளையாட்டு மேலாளர்கள் என்று கூறி சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த வீராங்கனையை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு கூறி, பேசியுள்ளனர். இவரை வைத்து மற்ற வீராங்கனைகளையும் சூதாட்டத்துக்குள் வளைக்க அவர்கள் திட்டம் போட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த வீராங்கனை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் பெங்களூரு போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் விசாரணை மேற்கொண்டு இருக்கிறது.
கிரிக்கெட் வீராங்கனையை சூதாட்ட புக்கிகள் சந்தித்து பேசியிருப்பது இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது.