விளையாட்டு

‘கையில் ஓநாய் டாட்டூ போட்டது ஏன் ?’ - வேகப்பந்து வீச்சாளர் சைனி பதில்

‘கையில் ஓநாய் டாட்டூ போட்டது ஏன் ?’ - வேகப்பந்து வீச்சாளர் சைனி பதில்

webteam

தனது இடது கையில் பொறிக்கப்பட்டுள்ள ஓநாய் டாட்டூ குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் சைனி விளக்கமளித்துள்ளார்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதல் பவுலிங் செய்த இந்திய அணி 95 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை மடக்கியது. இதற்கு முக்கிய காரணம் இளம் வேகப்பந்து வீச்சாளர் சைனி. நான்கு ஓவர்களை வீசிய சைனி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதற்காக அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

சர்வதேசப் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அவர் ஆட்டநாயகனாக சாதித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீது அனைவரது கவனமும் குவிந்தது. அத்துடன் சைனி தனது இடது கையில் ஓநாய் டாட்டூ ஒன்றை போட்டிருந்தார். அந்த டாட்டூவிற்கு அர்த்தம் என்ன என்பது தொடர்பாக சைனி விளக்கமளித்துள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் சைனியை பேட்டி எடுத்தார். 

அப்போது பேசிய சைனி, “முதல் போட்டி என்பதால் சற்று அழுத்தமாக உணர்ந்தேன். இருந்தாலும் விக்கெட்டுகள் சாய்ந்தன. பொலார்ட் விக்கெட் எதிர்பாராதது” என்று கூறினார். கையில் இருக்கும் டாட்டூ குறித்து பேசிய அவர், “எனது அண்ணன் சிறுவயது முதலே ஓநாய்கள் படம் அதிகம் பார்ப்பார். அவரது தூண்டுதலால் இந்த ஓநாய் டாட்டூவை போட்டேன். அதேசமயம் ஓநாய் எந்த சர்க்கஸிலும் சாகசம் செய்யாதவை. தனித்துவம் கொண்டவை” என்றார்.