இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரன்குவிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகின்றனர்.
நாட்டிங்காமில் இன்று தொடங்கியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில் குல்தீப், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோருக்கு பதிலாக பும்ரா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
கடந்த போட்டிகளைப் போல் அல்லாமல் தொடக்கத்திலேயே விக்கெட்கள் விழாமல் இருவரும் நிதானமாக விளையாடினர். ஷிகர் தவான் பவுண்டரிகளை அடித்து ரன் குவித்தார். கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 50 ரன்களை எட்டியது. இதனால், இந்திய அணி மீண்டும் தனது பழைய நிலைக்கு வந்து விட்டது போல் தோன்றியது.
ஆனால், 60 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகர் தவான் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 35 ரன்னுடன் தவான் ஆட்டமிழக்க அடுத்து புஜாரா களமிறங்கினார். தவான் ஆட்டமிழந்து அடுத்த 5 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி அடுத்த விக்கெட்டை இழந்தது. கே.எல்.ராகுல் 23 ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர், புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிதானமாக ரன்களை சேர்த்தது. ஆனால், கடந்த இரண்டு போட்டிகளை சொதப்பி வந்த புஜாரா இந்தப் போட்டிலும் 14 ரன் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 82 ரன்களுக்குள் 3வது விக்கெட்டையும் பறிகொடுத்தது.
இதனையடுத்து, விராட் கோலியும், ரகானேவும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். 38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 23, ரகானே 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் வோக்ஸ் 3 விக்கெட்களை சாய்த்து அசத்தியுள்ளார்.