ஃபார்முலா 4 pt web
விளையாட்டு

தெற்காசியாவிலேயே முதன்முறை... இரவு நேரத்தில் நடைபெற்ற ஃபார்முலா 4.. வெற்றிபெற்றவர்கள் யார்? யார்?

சென்னையில் இரு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற பார்முலா-4 கார் பந்தயம் நேற்றிரவு நிறைவடைந்தது. இதில் வாகை சூடியவர்கள் யார் என்று பார்க்கலாம்.

PT WEB

சென்னை தீவுத்திடல் பகுதியில் இரவு நேர பார்முலா-4 ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பந்தயத்தின் 2வது மற்றும் கடைசி நாளில் இந்தியன் ரேஸ், இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஜேகே என 3 பிரிவுகளின் பிரதான சுற்றுகள் நடைபெற்றன. போட்டிகளுக்கு நடுவே தமிழ்நாடு மகளிர் பைக் அணியின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

ஜேகே பிரிவு போட்டி, விபத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில், கடைசி வரை முன்னிலையில் இருந்த டார்க் டான் அணியைச் சேர்ந்த டில்ஜித் என்பவர் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. Indian Racing League ரேஸ் 2வில், டெல்லி அணியைச் சேர்ந்த ஆல்வெரோ முதலிடத்தை பிடித்தார்.

முக்கிய பிரிவான இந்தியன் ரேஸ் 2வில், BLACK BIRDS HYDERABAD அணியின் அலிபாய் முதலிடம் பெற்றார். இந்த அணி நடிகர் நாக சைதன்யாவிற்கு சொந்தமானது. இந்த பிரிவில் அகமதாபாத் அணியைச் சேர்ந்த திவி நந்தன் 2வது இடத்தையும், பெங்களூரு அணியைச் சேர்ந்த ஜேடர் பாரியாட் 3வது இடத்தையும் பிடித்தனர். இந்தியன் ரேஸ் 2வில் வென்றவர்களுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேரத்தில் நடைபெற்ற ஃபார்முலா-4 பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். நீதிமன்ற வழக்குகள், எப்.ஐ.ஏ. சான்றிதழ் கிடைப்பதில் கால தாமதம் உள்ளிட்ட தடைகளை தாண்டி, கார் பந்தயம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.