விளையாட்டு

சிக்கல்களைக் களைந்து சிகரம் தொடுமா சென்னை அணி ?

webteam

இன்றையப் போட்டியில் சென்னை மற்றும் ஹைதாராபாத் அணிகள் மோத உள்ள நிலையில்,  தோல்வியில் இருந்து மீள சென்னை அணியின் கவனம் செலுத்த வேண்டிய இடங்களைப் பார்க்கலாம். 

ஆஸ்தான ரைவல் அணியை வீழ்த்தி நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கினாலும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகள் சென்னை அணியை வேதனை தீயில் ஆழ்த்தியுள்ளன. அணிக்கு உள்ள முதல் முக்கிய பிரச்னை என்றால் அது மோசமான ஓபனிங் . முந்தைய சீசன்களில் மகுடம் சூடவே காரணமாக இருந்த வாட்சனும், விஜய்யும் இந்த சீசனில் ரன்களைச் சேர்க்க திணறுகின்றனர். அதுவே பின்னால் வரும் பேட்ஸ்மேன்களுக்கு சுமையாக மாறி விடுகிறது.

ஓபனர்கள் ரன் சேர்க்கத் தவறினால், நிலைத்து நின்று டூபிளசியுடன் பாட்னர் ஷிப் கொடுக்க வலுவான பேட்ஸ்மேன் இல்லாதது அணிக்கு அடுத்தச் சிக்கல். ரெய்னாவின் வெற்றிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. இளம் வீரர் கெய்க்வாட் மற்றும் கேதர் ஜாதவ் சோபிக்காமல் ஏமாற்றமளித்து வருகின்றனர். 6 ஆவது பந்துவீச்சாளர் இல்லாதது அணிக்கு இருக்கும் மற்றுமொரு பிரச்னை.

கடந்த 3 போட்டிகளிலுமே 5 பவுலர்களையே சென்னை அணி பயன்படுத்தியுள்ளது. சென்னை அணிக்கு எகானமி பவுலராக அறியப்பட்ட ஜடேஜா, கடந்த 3 போட்டிகளிலுமே 40 ரன்களுக்கும் மேல் வாரி வழங்கியுள்ளார். சுழற்பந்து வீச்சு மட்டுமின்றி, பவர் பிளேவில் வேகப்பந்து வீச்சாளர்களும் ஏமாற்றமே அளித்துள்ளனர். விளையாடிய 3 போட்டிகளில் சேர்த்து முதல் 10 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. ஹேசல்வுட் மற்றும் சாம்கரண் வேகப்பந்துவீச்சில் ஆறுதலளிக்கின்றனர். அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழலில் உள்ள சென்னை அணி, சிக்கல்களைக் கடந்து இந்த சீசனிலும் சிகரம் தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.