இந்தியா-ஆஸ்திரேலியா டி20 தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைக்கவுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இதனால் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி பழைய தோல்வியை மனதில் வைத்து பழி வாங்கும் என்பதால் தொடரில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இரண்டு சிக்சர்கள் அடித்தால் இந்திய அணியின் ரோகித் சர்மா ஒரு பெரிய சாதனையை படைக்கவுள்ளார். அதாவது இரண்டு சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் ரோகித் சர்மா டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இந்தப் பட்டியலில் ஏற்கெனவே ரோகித் சர்மா 102 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் மற்றும் மேற்கிந்திய தீவகளின் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் 103 சிக்சர்கள் அடித்துள்ளனர்.
ஏற்கெனவே ரோகித் சர்மா இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது 2 சிக்சர்கள் விளாசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இவர் ஒருநாள் போட்டியில் தோனியின் 215 சிக்சர்கள் சாதனையை சமன் செய்திருந்து குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தற்போது நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியிலும் ரோகித் சர்மா சிக்சர் மழை பொழிந்து இந்தச் சாதனையைப் படைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.