India - Malaysia Twitter
விளையாட்டு

Men's Asian Champions Trophy | 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவோடு மோதும் மலேசியா!

ஒவ்வொரு ஆசிய கோப்பை ஹாக்கி தொடரிலும் அரையிறுதிவரை முட்டிமோதிய மலேசியா அணி, முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Rishan Vengai

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரானது சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதியான இன்றுடன் நிறைவுபெறவிருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, சவுத் கொரியா, ஜப்பான், மலேசியா முதலிய 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் தொடரில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா 4 வெற்றி, 1 டிராவுடன் 13 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், மலேசியா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. மறுபுறம் சிறப்பாக விளையாடிய சவுத் கொரியா மற்றும் ஜப்பான் இரண்டு அணிகளும் ஐந்தைந்து புள்ளிகளை பெற்று 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்தன.

நடப்பு சாம்பியன் அணியை தோற்கடித்து பைனல் சென்ற மலேசியா!

4 ஸ்டார் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டிகளானது ஆகஸ்ட் 11ஆம் தேதியான நேற்று விறுவிறுப்பாக நடைப்பெற்றது. முதல் அரையிறுதிப்போட்டியில் சவுத் கொரியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் அணியான சவுத் கொரியா அணியை எழவே விடாமல் அடிக்குமேல் அடி கொடுத்து கெத்து காட்டிய மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் அபாரமான வெற்றியை பதிவு செய்து முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Malaysia Hockey Team

இரண்டாவது போட்டியில் கடந்த ஆண்டு அரையிறுதியில் தோற்கடித்த ஜப்பான் அணியை எதிர்கொண்டு விளையாடியது இந்திய அணி. நடப்பு தொடரிலும் அந்த அணிக்கு எதிராக டிரா மட்டுமே செய்திருந்த இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற எண்ணம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா நேற்றைய ஆட்டத்திலும் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது.

அட்டாக்கிங், டிஃபன்ஸ் இரண்டிலும் அசத்தலாக செயல்பட்ட இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை பதிவுசெய்ய, ஒரு கணம் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிப்போனது ஜப்பான் அணி. இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங் 19-வது நிமிடத்தில் ஒரு கோல், 23வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் மற்றும் 30வது நிமிடத்தில் மன்தீப் சிங் ஒரு கோல் என அடிக்க, இரண்டாவது பாதியில் இந்தியாவின் சுமித் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி செல்வம் என மாறிமாறி கோல்மழை பொழிந்தது இந்திய அணி. முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்திய இந்தியா, 5ஆவது முறையாக இறுதிப்போட்டியில் கால் பதித்துள்ளது.

6 சீசன்களில் 5 முறை செமி-ஃபைனலில் தோல்வி!

ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடரானது 2011ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை என 2012, 2013 வரை நடத்தப்பட்டது. பின்னர் 2014, 2015 என இரண்டு வருடங்கள் நடைபெறாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு பிறகு 2018, 2021ஆம் ஆண்டுகள் என மொத்தம் 6 சீசன்கள் இதுவரை நடைபெற்றுள்ளது.

Indian Hockey Team

மொத்தமாக 6 சீசன்களிலும் ஆதிக்கம் செலுத்திய இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தலா 2 முறை என நான்கு கோப்பைகளையும், ஒருமுறை கோப்பையை பகிர்ந்து கொண்டும் இருக்கின்றன. அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணிகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மாறிமாறி 5 கோப்பைகளை வென்ற நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு 6வது சீசன் இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்திய சவுத் கொரியா அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது.

Malaysia Hockey Team

6 ஆசிய கோப்பை சாம்பியன் தொடரிலும் தொடர்ச்சியாக 5 முறை அரையிறுதிக்கு முன்னேறிய மலேசிய அணி தோல்வியையே சந்தித்தது. முதல் ஐந்து தொடர்களில் 3வது இடத்தையே பிடித்த மலேசிய அணியால் இறுதிப்போட்டிக்கு மட்டும் முன்னேறவே முடியவில்லை. இந்நிலையில் 6வது சீசனான 2021ஆம் ஆண்டு தொடரிலிருந்தே விலகியது மலேசியா அணி. 5 வருட இடைவெளிக்கு பிறகு திரும்ப வந்திருக்கும் மலேசியா அணி, தலைமை பயிற்சியாளர் அருள் அந்தோனி செல்வராஜ் வழிகாட்டுதலில் வெற்றிநடைபோட்டுவருகிறது.

இந்தியாவிற்கு எந்தளவு மலேசியா கடினமான அணியாக இருக்கும்?

நடப்பு மலேசியா அணியின் பலமாக இருப்பது, 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக மாறிய தமிழகத்தைச் சேர்ந்த அருள் அந்தோனி செல்வராஜ் தான். பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே வீரர்களுக்கிடையேயான பிரச்னைகளை அடையாளம் கண்டுகொண்ட அந்தோனி, மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை வெளிக்கொண்டுவந்தார். மேலும் அணியில் கோல்கீப்பரின் பங்கு என்ன என்பதை உணர்ந்துகொண்ட அந்தோனி, 321 சர்வதேச போட்டிகளில் விளையாடியவரான குமார் சுப்ரமணியத்தை பயிற்சியாளராக நியமித்தார். இருவரும் சேர்ந்து மலேசிய அணியை முழுவீச்சில் தயார் செய்ததை அடுத்து, தொடர்ந்து சிறப்பாக விளையாட தொடங்கியது மலேசியா.

arul anthoni selvaraj

நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மலேசிய அணி தோல்வியடைந்த போட்டிகளுக்கு பிறகு வீரர்களிடம் பேசிய அந்தோனி, “தோல்வியை என்னிடம் விட்டுவிடுங்கள், அதை சரிசெய்யும் வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அடுத்த போட்டிக்கான வெற்றியை நோக்கி ஆயத்தமாகுங்கள்” என கூறி உத்வேகப்படுத்திவருகிறார்.

மேலும் ஒவ்வொரு வீரர்களின் ஆட்டத்தையும் உன்னிப்பாக கவனித்து வரும் அவர், செமி-ஃபைனல் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், “முதலில், வீரர்கள் பந்தை வைத்திருப்பதை நன்றாகக் கட்டுப்படுத்தினார்கள். இரண்டாவதாக அவர்கள் களத்தில் எனர்ஜியோடு இருந்தது உத்வேகமாக இருக்கிறது. அவர்களின் தடுப்பாட்டம், எந்த பந்துகளுக்கு செல்ல வேண்டும், எதற்கு செல்லக்கூடாது என கூர்ந்துசெயல்பட்ட விதம் ஃபைனலுக்கான நம்பிக்கையைத் தருகிறது” என்றார்.

Malaysia Hockey Team

இருப்பினும் தலைமைப் பயிற்சியாளர் அந்தோனியை கவலையடையச் செய்வது, அவரது முக்கிய வீரர்கள் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாது மட்டும் தான். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறுசிறு தவறுகளை கண்ட அவர், அதனை எல்லாம் சரிசெய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். முதல்முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி பைனல் வரை வந்திருக்கும் மலேசிய அணி, நிச்சயம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. செமி ஃபைனலில் சவுத் கொரியா அணியை 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.