மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன, இந்திய அணியின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு அணியும் ரவுண்ட் ராபின் சுற்றில் 7 போட்டிகளில் விளையாட வேண்டிய நிலையில், இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்திலும் வெற்றிபெற்று, 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதியும் பெற்றுவிட்டது. தென்னாப்பிரிக்க அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்று, 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறுவதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நியுசிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப்போட்டி இந்தியா மகளிர் அணிக்கு வாழ்வா? சாவா என்ற நிலையில் உள்ளது. இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.