Joginder Narwal  dabang delhi
விளையாட்டு

2024 Pro Kabaddi | தபாங் டெல்லி: ரெய்டர்களின் தோள்மீது ப்ளே ஆஃப் கனவு!

யோகேஷ் தஹியா. டெல்லி அணியின் கார்னர் டிபென்டர். கடந்த சீசனில் 23 போட்டிகளில் ஆடி 77 புள்ளிகள். 'எமர்ஜிங் ப்ளேயர் ஆஃப் தி சீசன்' விருதை போன சீசனில் வென்ற திறமைக்காரர்.

Nithish

பி.கே.எல்லில் டெல்லி அணியின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. தொடரின் முதல் பாதி சீசன்களில் பாலா பட ஹீரோ போல அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருந்த அணி அது. இரண்டாம் பாதியிலோ சங்கர் பட ஹீரோ போல புலிப்பாய்ச்சல்தான். கடந்த ஐந்து சீசன்களாக தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும் ஒரே அணி தபாங் டெல்லிதான்.

ஏலத்திற்கு முன்னால் ரீட்டெயின் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல்படி பார்த்தால் டெல்லி அணியின் ரெய்டிங் யூனிட்தான் பலம் வாய்ந்ததாக இருந்தது. ஏலத்திலும் திட்டமிட்டபடி சில வீரர்களை எடுத்து குதிரை பலத்தை யானை பலமாக தரம் உயர்த்திவிட்டார்கள். இத்தனைக்கும் மற்ற அணிகள் எல்லாம் கோடிகளைக் கொட்டி வீரர்களை வாங்கிக்கொண்டிருக்க, கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பெரும்பாலான வீரர்களை அடிப்படை விலையிலேயே வாங்கி பையில் போட்டுக்கொண்டார்கள். முந்தைய சீசன்களைவிட அதிக கோடீஸ்வர வீரர்களைக் கொண்ட சீசன் இது என்றெல்லாம் சொல்லபட்ட நிலையில் டெல்லி அணி அதிகபட்சமாய் ஒரு வீரருக்கு செலவழித்ததே 26 லட்சம்தான். சித்தார்த் தேசாய்க்காக.

இது சரியான திட்டமிடலா இல்லை சிக்கனமான அணுகுமுறையா என்பதையெல்லாம் இனி விவாதிப்பது வேஸ்ட். இந்த அணி வேலைக்காகுமா இல்லையா என்பதுமட்டுமே இனி கவனத்தில்கொள்ளவேண்டிய விஷயம்.

பலம்

Naveen Kumar

மேலே சொன்னதுபோல ரெய்டிங் டிபார்ட்மென்ட் தான். பி.கே.எல்லின் இப்போதைய இளவரசன், முன்னாள் சுட்டிக்குழந்தை நவீனை தத்தெடுத்து வளர்த்ததே டெல்லி அணிதான். இவர் ஆடத் தொடங்கிய ஆறாவது சீசனிலிருந்துதான் அணி தொடர்ந்து ப்ளே ஆஃப்பிற்குத் தகுதி பெறத் தொடங்கியது. இதுவரை 91 போட்டிகளில் ஆடி 1020 புள்ளிகள் குவித்திருக்கிறார். ரெய்ட் சராசரி 11.04. பி.கே.எல் வரலாற்றிலேயே இவரின் ரெய்ட் சராசரிதான் அதிகம். இவருக்கு துணை ரெய்டராக களமிறக்கப்பட்டவர் தான் அஷு மாலிக். ஆனால் இவருக்கு இணையாக அவரும் இரண்டு சீசன்களாக பாயின்ட்களைக் குவிக்கிறார். கடந்த சீசனில் அதிக ரெய்ட் புள்ளிகள் எடுத்த பெருமை அஷுவிற்கே. இவர்கள் இருவரும் போதாதென பி.கே.எல்லின் பாகுபலி சித்தார்த் தேசாயை வேறு அணியில் எடுத்துவைத்திருக்கிறார்கள். ரெய்ட் போய்விட்டு திரும்பிவரும் வழியில் கொஞ்சம் டிபென்டர்களை முட்டித்தூக்கி தோளில் போட்டுக்கொண்டுவந்துவிடும் பலசாலி. இதுபோக ஹிமான்ஷு நர்வால், வினய், ஆல்ரவுண்டரான ஆஷிஷ் என ஏராளம்பேரை பேக்கப்பாக வைத்திருக்கிறார்கள்.

அணியின் கோச்சாக இந்த சீசன் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் முன்னாள் தபாங் டெல்லி வீரரும் கோப்பை வென்ற கேப்டனுமான ஜோகிந்தர் நர்வால். நவீன், அஷு போன்ற வீரர்களை செம்மைப்படுத்தியதில் இவரின் பங்கும் உண்டு. எனவே இவருக்குக் கீழ் வீரர்கள் முனைப்போடு ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பலவீனம்

ஏலத்தில் ரெய்டிங் டிபார்ட்மென்ட்டை பலப்படுத்த செலுத்திய கவனத்தில் பாதியைக்கூட டிபென்ஸை காப்பதற்கு செலுத்தவில்லை அணி நிர்வாகம். காரணம், கார்னர் டிபென்டர்களான ஆஷிஷ், யோகேஷ் இருவர் மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. போன சீசனில் இவர்கள் இருவரின் மொத்தக்கணக்கு 125 புள்ளிகள். ஆனால் இதே நம்பிக்கை அணியின் கவர் டிபென்டர்கள் மீது வைக்கமுடியுமா என்றால் சந்தேகமே. இந்த சீசனின் பலவீனமான கவர் டிபென்டர்களைக் கொண்ட அணிகளுள் ஒன்று டெல்லி. பிரச்னை என்னவெனில், பேக்கப் வீரர்களில் கூட சொல்லிக்கொள்ளும்படியான கவர் டிபென்டர்கள் இல்லை.

பிரியவே வாய்ப்பில்லை என நினைத்த பிக்பாஸும் கமலுமே பிரிந்துவிட்டார்கள். ஆனால் டெல்லி அணியையும் காயங்களையும் பிரிக்கவே முடியாது போல. நவீன் கடந்த இரண்டு சீசன்களாகவே காயத்தால் அவதிப்படுகிறார். போதாக்குறைக்கு தொடரின் முதல் பாதியை களத்திலும் இரண்டாம் பாதியை காயத்தால் மருத்துவமனையிலும் செலவழிக்கும் வாடிக்கை கொண்ட சித்தார்த் தேசாய் வேறு அணியிலிருக்கிறார். இவர்கள் இருவரும் காயம்படாமல் எல்லா போட்டிகளிலும் பங்கேற்பது டெல்லி அணிக்கு மிகவும் முக்கியம்.

கவனிக்கப்பட வேண்டிய வீரர்

ஆடியிருப்பது ஒரே ஒரு சீசன் தான். ஆனாலும் 'யாருப்பா இந்தப் பையன்' என பல அணி நிர்வாகங்களையும் ரசிகர்களையும் புருவம் உயர்த்த வைத்தவர் யோகேஷ் தஹியா. டெல்லி அணியின் கார்னர் டிபென்டர். கடந்த சீசனில் 23 போட்டிகளில் ஆடி 77 புள்ளிகள். 'எமர்ஜிங் ப்ளேயர் ஆஃப் தி சீசன்' விருதை போன சீசனில் வென்ற திறமைக்காரர். இந்த முறையும் அந்த மேஜிக்கை நிகழ்த்திக்காட்டுவார் என எதிர்பார்க்கிறது அணி நிர்வாகம். நம்புவோம்.

ப்ளேயிங் செவன்

ரெய்டிங் யூனிட்டில் பெரிதாய் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை. டிபென்டர்களை பொறுத்தவரை லெப்ட் கார்னரில் அனுபவசாலி என ரிங்கு நர்வாலுக்கு வாய்ப்புதரப் போகிறார்களா இல்லை கடந்த சீசனில் அணிக்காக நன்றாக ஆடிய ஆஷிஷை முன்னிறுத்தப்போகிறார்களா என்பதுதான் கேள்வி. ரைட் கார்னருக்கு ஆல்ரவுண்டரான இன்னொரு ஆஷிஷ் இருக்கிறார் என்றாலும் யோகேஷுக்கே முக்கியத்துவம் தரப்படும்.

நவீன் (கேப்டன் - முதன்மை ரெய்டர்) , சித்தார்த் தேசாய் (ரெய்டர்), அஷு மாலிக் (ரெய்டர்), விக்ராந்த் (லெப்ட் கவர்), நிதின் பன்வார் (ரைட் கவர்), ஆஷிஷ் (லெப்ட் கார்னர்), யோகேஷ் (ரைட் கார்னர்).

ப்ளே ஆஃப்பிற்கு இந்தமுறையும் தகுதி பெற்று டபுள் ஹாட்ட்ரிக் அடித்துவிடவேண்டும் என்கிற முனைப்போடு களமிறங்குகிறது டெல்லி அணி. ஆனால் அந்தச் சுமையின் ரெய்டர்களின் தோள்மீதே. அவர்கள் பொறுப்பாய் சுமந்து தபாங் டெல்லியை கரைசேர்ப்பார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.