விளையாட்டு

ரன் குவிப்பில் அசத்தும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்… களையிழந்த தோனி பேட்டிங்!

ரன் குவிப்பில் அசத்தும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்… களையிழந்த தோனி பேட்டிங்!

EllusamyKarthik

அமீரக மண்ணில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங்கில் கோலோச்சி வருகின்றனர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள். 

கிரிக்கெட் வரலாற்றை கொஞ்சம் புரட்டினால் பவுலர்கள் எப்படி பந்து வீச மட்டுமே பயன்படுத்தப் படுகிறார்களோ அதே போல விக்கெட் கீப்பர்கள் கீப்பிங் பணியை மட்டுமே அதிகம் கவனித்து வந்தனர். பேட்டிங்கில் அவர்களுக்கு பெரிய டாஸ்குகள் எதுவும் இருக்காது. ஃபீல்டிங் பொசிஷனில் விக்கெட் கீப்பர்களின் பணி கடினம் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் உடலளவிலும், மனதளவிலும் திடமான வீரரையே அதற்கு தேர்வு செய்து வந்தனர். டெஸ்ட், ஒருநாள் என அனைத்து சர்வதேச அணியிலும் இந்த நிலை தான். 

90களில் விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் ஜொலிக்கும் வீரர்களுக்கான டிமெண்ட் சர்வ்தேச கிரிக்கெட்டில் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் பெரும்பாலான அணிகள் விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன் என 2 IN 1 ரோல் ஆடும் வீரரை அணியில் சேர்க்க துவங்கியது. ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் அந்த டிரெண்டை கொண்டு வந்த வீரர்களில் முன்னோடி எனவும் சொல்லலாம்.

ஆண்டி பிளவர், தோனி, மெக்கல்லம், பவுச்சர், சங்கக்காரா மாதிரியான வீரர்கள் கில்கிறிஸ்ட் வழியில் கிரிக்கெட் விளையாடியவர்கள். 

டி20 ஆட்டங்களின் வருகைக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கான டிமெண்ட் எகிறியது. சமயங்களில் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் கீப்பிங் செய்த அனுபவம் உள்ள பேட்ஸ்மேன்களை சர்வதேச ஆட்டங்களில் கீப்பிங் செய்ய பணிப்பதும் ஒரு எக்ஸ்ட்ரா பவுலர் அல்லது பேட்ஸ்மேனை அணியில் சேர்க்கலாம் என்ற யோசனையினால் தான். 

ஐபிஎல் ஆட்டங்களில் அது மாதிரியான பரிசோதனை முயற்சிகளும் நடப்பது உண்டு. நடப்பு சீசனில் தங்கள் அணிக்காக ரன் குவித்து மேட்ச் வின்னர்களாக ஜொலிக்கின்றனர் சில வீரர்கள். 

அதிலும் அதிக ரன்கள்  பேட்ஸ்மேன்களின் டாப் 10 பட்டியலில் மூன்று பேர் விக்கெட் கீப்பர்கள் தான். 

அவர்கள் யார்? யார்? என்பதை பார்ப்போம்…

கே.எல்.ராகுல் 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நடப்பு சீசனில் பத்து இன்னிங்ஸ் விளையாடி 540 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரு சதமும், ஐந்து அரை சதமும் அடங்கும். அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 135.67.

டிக்காக் 

மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான டிகாக் ஒன்பது இன்னிங்ஸ் விளையாடி 322 ரன்களை சேர்த்துள்ளார். மும்பையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறும் போதெல்லாம் டிகாக் ரன் குவிப்பில் ஈடுபடுவது வழக்கம். இந்த சீசனில் மட்டும் நான்கு அரை சதங்களை அவர் விளாசியுள்ளார். 

பேர்ஸ்டோ 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஜானி பேர்ஸ்டோ ஒன்பது விளையாடி 316 ரன்களை குவித்துள்ளார். அதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 97.

இவர்கள் தவிர பூரன், டிவில்லியர்ஸ், பட்லர் மாதிரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் தங்கள் அணிக்காக மேட்ச் விண்ணர்களாக இந்த சீசனில் ஜொலித்து வருகின்றனர். 

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி பத்து இன்னிங்ஸ் விளையாடி 164 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதேபோல், கொல்கத்தா அணி கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் உள்ளிட்டவர்களும் சொதப்பி வருகின்றனர். டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.