வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பையில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 162 ரன்களும் அம்பத்தி ராயுடு 100 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
கடந்த போட்டியில் ஆக்ரோஷமாக எழுந்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 153 ரன்களில் சுருட்டியது. அதே தெம்புடன் இன்றைய போட்டியிலும் களமிறங்கும். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ந்து 8-வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றும். அதோடு இந்திய மண்ணில் தொடர்ந்து ஆறாவது தொடரை கைப்பற்றிய பெருமையும் கிடைக்கும்.
மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்த கேப்டன் விராத் கோலி, முதல் மற்றும் நான்காவது போட்டியில் சதங்கள் விளாசிய ரோகித் சர்மா, கடந்த போட்டியில் 100 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கீப்பிங்கில் கலக்கும் தோனி, பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக் கவில்லை. அவர் அடித்து ஆட வேண்டும் என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க் கின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி வருகிறார் தோனி. இன்றைய போட்டியில் அவர் ஒரு ரன் எடுத்தால், பத்தாயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்.
இந்த மைதானத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டி நடக்க இருப்பது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு இங்கு, நியூசிலாந்துடன் டி20 போட்டி நடந்தது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.