விளையாட்டு

நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: பரிதாபமாக தோற்றது வெஸ்ட் இண்டீஸ்!

webteam

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வந்தது. 

இதில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி, 373 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ராஸ் டெய்லர் அபார சதம் அடித்தார். இது அவருக்கு 17 வது சதம். நியூசிலாந்து அணியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் அவர் இடம்பெற்றார்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியது. நியூசிலாந்தின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி திணறியது. பின்னர் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 240 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. 

நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 3 விக்கெட்டும், சவுதி, போல்ட், சான்ட்னர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.