விளையாட்டு

கிரிக்கெட்டின் கடவுள்..! - சச்சின் டெண்டுல்கரும் சக வீரர்களின் புகழாரமும்

கிரிக்கெட்டின் கடவுள்..! - சச்சின் டெண்டுல்கரும் சக வீரர்களின் புகழாரமும்

jagadeesh

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2013 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் ஓய்வு பெற்றாலும் அவருடைய ரசிகர்கள் சச்சினின் மறக்க முடியாத ஆட்டங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்தும், நினைவுக் கூறியும் வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதியான இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். சச்சினின் பிறந்தநாளை சமூகவலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏறக்குறைய 24 ஆண்டுகள் சச்சின், இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.

இன்றைய சமூத வலைத்தள காலக்கட்டத்தில் இருக்கும் பலருக்கும் சச்சினை ஏன் God of Cricket என அழைக்கப்படுகிறார் என தெரியவில்லை. இந்தப் பெயரை அவருக்கு ஊடகங்கள் வழங்கவில்லை. அவர் காலத்தில் சமமாக விளையாடிய வீரர்கள் வழங்கியது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அதனால் சச்சின் குறித்து அவரின் சமகால வீரர்கள், ஜாம்பவான்கள் என்ன சொன்னார்கள் என்பதின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

சச்சினை கிரிக்கெட்டின் கடவுள் என முதலில் யார் சொன்னது தெரியுமா அவர் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேடன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு 2002-2003 ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடு திருப்பியது. அந்தத் தொடரில் மேத்யூ ஹேடன் அபாரமாக விளையாடினார். அந்த தொடர் முடிந்து நாடு திரும்பிய அவர் அளித்தப் பேட்டியில் "இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர்" என்றார். அதன் பின்புதான் "கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்" என்ற வாக்கியம் பிரபலமானது.

பின்பு 2012 இல் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் தனுது 100 ஆவது சதத்தை பதிவு செய்தபோது அதே மேத்யூ ஹேடன் "நான் கடவுளை பார்த்திருக்கிறேன். அவர் இந்தியாவுக்காக 4 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்குவார்" என பெருமையாக தெரிவித்தார். சச்சினின் சமகால ஜாம்பவானாக அறியப்பட்டவர் பிரையன் லாரா. அந்தக் காலக்கட்டத்தில் லாராVsசச்சின் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதமே நடந்துக் கொண்டிருக்கும். ஆனால் தன்னுடைய சமகால வீரராக சச்சின் நினைக்கவேயில்லை. சச்சின் குறித்து கூறும்போது லாரா "சச்சின் ஒரு ஜீனியஸ், அவரது ஆட்டம் காலத்தால் அழியாதது" என்றார்.

ஜிம்பாப்வே அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் சச்சின் குறித்து பேசும்போது "இந்த உலகத்தில் இரண்டுவிதமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஒருவர் சச்சின் டெண்டுல்கர் பின்பு மற்றவர்கள்" என்று புகழாரம் சூட்டினார். 1997 - 1998 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட்டில் தலைச் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக விளங்கியவர் ஷேன் வார்னே. அந்த டெஸ்ட் தொடர் இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதாக பார்க்கப்படவில்லை. சச்சின் - ஷேன் வார்னே இடையிலான தொடராகதான் பார்க்கப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அப்போது முதல் இன்னிங்ஸில் ஷேன் வார்னே பந்துவீச்சில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் சோகமானது. ஆனால் அதே போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷேன் வார்னேவின் பந்துவீச்சை பறக்கவிட்டார் சச்சின் டெண்டுல்கர். 4 சிக்ஸர்கள் 14 பவுண்டரிகள் என்று 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது ஷேன் வார்னேவின் பந்துவீச்சை அடிக்க ஆரம்பித்த சச்சின் இறுதி வரை நிறுத்தவேயில்லை.

அந்தப் போட்டி குறித்து பேசிய ஷேன் வார்னே "நான் இன்றைய இரவு சச்சின் எனது பந்துவீச்சில் இறங்கி இறங்கி அடித்த சிக்ஸர்களின் நினைவுகளுடன் தூங்க செல்வேன்" என்றார். அந்த தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக இருந்த மார்க் டெய்லர் "நாங்கள் இந்தியா என்ற அணியுடன் தோற்கவில்லை, நாங்கள் சச்சின் என்ற தனி மனிதனிடம் தோற்றுவிட்டோம்" என்றார். இந்திய கிரிக்கெட்டின் பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்கள்.

உலக கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சில் வாசிம் அக்ரமுக்கு தனி இடம் உண்டு. அவரும் சச்சினின் சமகால கிரிக்கெட் வீரர். பாகிஸ்தானின் பந்துவீச்சு "லெஜண்ட்" ஆக கருதப்படுபவர். 2003 உலகக் கோப்பையில் வாசிம் அக்ரமின் பந்துவீச்சை சிதறடித்த சச்சினை நம்மால் மறக்க முடியாது. அதுவும் அந்த Back foot cover drive ஷாட் அரிதிலும் அரிதாக விளையாடப்படுபவை. அதனை அசால்டாக செய்தார் சச்சின். இது குறித்து வாசிம் அக்ரம் "சச்சின் போன்ற வீரர்கள் எப்போதாவதுதான் தோன்றுவார்கள். அவரின் காலத்தில் நானும் விளையாடியது எனக்கு பெருமை" என்றார்.

புகழ்பெற்ற அம்பயரான ரூடி கோர்ட்சன் "அம்பயராக நிற்கும்போது எதிரே சச்சின் விளையாடிக் கொண்டு இருந்தால் எனக்கு சோர்வே ஏற்படாது" என்றார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி "நான் விளையாட்டாக முன்பெல்லாம் சொல்வதுண்டு, சச்சின் ஓய்வுப்பெறுவதற்கு முன்பு நான் ஓய்வுப் பெற்றுவிடுவேன்" என்றார். 

இங்கிலாந்தின்  கிரிக்கெட் விமர்சகர்  பீட்டர் ரோபக் கூறிய விஷயம் ஒன்று மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

அது "நான் ஒரு முறை சிம்லா - டெல்லி இடையே ரயிலில் பயணம் செய்துக்கொண்டு இருந்தேன். அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சச்சின் அன்றையப் போட்டியில் 98 ரன்களில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது ரயிலில் இருந்த பயணிகள், ரயில்வே அதிகாரிகள் என அனைவரும் சச்சின் சதமடிப்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போதுதான் எனக்கு ஒன்று தோன்றியது. சச்சினால் இந்தியாவின் நேரத்தையும் நிறுத்த முடியும் என்று" என குறிப்பிட்டுள்ளார்.