இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாஹா, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தனக்கு பத்திரிகையாளர் ஒருவர் வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்ததாக சாஹா சொல்லியிருந்தார். அதனை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்திருந்தனர். சேவாக், ரவி சாஸ்திரி, ஹர்பஜன் சிங் ஆகியோர் இதில் அடங்குவர். அவருக்கு ஆதரவாக கருத்து சொன்னவர்கள் மிரட்டல் விடுத்த அந்த பத்திரிகையாளரின் பெயரை பகிருமாறு சொல்லியிருந்தனர். இந்த நிலையில் சாஹா, ‘ஏன் பத்திரிகையாளரின் பெயரை சொல்லவில்லை’ என்பது குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா பேசுவார் என பொருளாளர் அருண் துமால் PTI செய்தி நிறுவனத்திடம் சொல்லியிருந்தார்.
“பிசிசிஐ தரப்பிலிருந்து என்னை யாரும் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் எனக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளரின் பெயரை தெரிவிக்குமாறு சொன்னால் அதை செய்வேன். ஒருவரது பெயரை பொது வெளியில் சொல்லி அவரது கரியரை நாசம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பமல்ல. அதனால்தான் நான் அன்று ட்வீட்டில் அவரது பெயரை சொல்லவில்லை. என்னை போல இனி எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் இது போல நடக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த ட்வீட்டை செய்திருந்தேன். மற்றபடி வேறெதுவும் இல்லை” என சொல்லியுள்ளார் சாஹா.