விளையாட்டு

சி.எஸ்.கே வெற்றியும்.. ஆர்.சி.பி தோல்வியும்.. ஏன் ? - டிராவிட் பார்வை

சி.எஸ்.கே வெற்றியும்.. ஆர்.சி.பி தோல்வியும்.. ஏன் ? - டிராவிட் பார்வை

webteam

ஐபிஎல்-ல் சென்னை அணி ஏன் வெற்றி பெறுகிறது ? என்பதையும், பெங்களூர் ஏன் தோற்கிறது ? என்பதையும் ராகுல் டிராவிட் விளக்கியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரையில் வெற்றிகளை குவிக்கும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. அதேசமயம் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல், தோல்வியின் முகமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது. கடந்த ஆண்டு கூட பெரும்பாலான போட்டிகளில் தோல்வியடைந்த பெங்களூர் அணி பரிதாப நிலையை அடைந்தது. அதேசமயம் சீனியர் அணி என அழைக்கப்பட்ட சென்னை அணி அதிக போட்டிகளில் வென்று இறுதிவரை சென்றது.

இந்நிலையில், இரண்டு அணிக்கும் ஏன் இந்த வெற்றி, தோல்வி பாகுபாடு இருக்கிறது என்பதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் விளக்கியுள்ளார். அதில், சென்னை அணியை பொறுத்தவரையில் அதன் உரிமையாளர் கிரிக்கெட் அனுபவம் உள்ள நபராக இருப்பதே வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மற்ற அணிகளைவிட சென்னை அணியின் வீரர்கள் தேர்வு சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை அணியில் 4 பிரிவுகளிலும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாகவும், இந்திய அணி தரப்பில் குறைந்த அளவு வீரர்கள் இருந்தாலும் அவர்கள் சிறந்த வீரர்களாக திகழ்வதாகவும் கூறியுள்ளார். அத்துடன் சென்னை அணி பவுலிங்கில் தரமாக உள்ளதாகவும், எதிரணியை கணித்து ஆடுவதில் அவர்கள் சாமர்த்தியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவையே சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.

அதேசமயம் பெங்களூர் அணியை பொறுத்தவரையில் அணித் தேர்வு மற்றும் ஏலத்தில் வீரர்களை எடுத்தல் இரண்டிலும் பிழையிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மிட்ஜெல் ஸ்டார்க் போன்ற பவுலர்கள் பெங்களூர் அணியில் இருந்த போதும் அந்த அணி வெற்றி பெற்றதாகவும், ஆனால் அவர்களை அனுப்பிவிட்டு சில பேட்ஸ்மேன்களை அந்த அணி எடுத்துக்கொண்டதாகவும் ராகுல் குறை கூறியுள்ளார். இதனால் தான் பெங்களூர் அணி தோல்விகளை குவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெங்களூர் அணி பவுலிங்கை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.