இந்திய அணியில், ஷமிக்கு மாற்றாக விளையாடவுள்ள வீரர் யார் என்பது குறித்து ரசிகர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் வரும் 26 அன்று தொடங்க உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது கம்மின்ஸ் வீசிய பந்து வலது கையில் பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்ட காரணத்தினால் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஷமிக்கு மாற்றாக நவ்தீப் சைனி அல்லது முகமது சிராஜ் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிராஜ் ஆஸ்திரேலிய ஏ அணியுடனான இரண்டு பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அணியில் விளையாட சிராஜுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவுக்காக அறிமுக வீரராக அவர் களம் இறங்கலாம். இந்திய அணி நிர்வாகம் இவர்கள் இருவருக்கும் மாற்றாக வேறொரு பந்து வீச்சாளரை தேர்வு செய்ய விரும்பினால் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய பவுலர்களான ஷர்துல் தாக்கூர், தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் மற்றும் கார்த்திக் தியாகி மாதிரியான வீரர்களை மட்டுமே ஆப்ஷனாக எடுத்துக் கொள்ள முடியும். இருப்பினும் இவர்கள் மூவரும் டெஸ்ட் தொடருக்கான அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.