விளையாட்டு

பிளே ஆஃப் ரேஸில் முந்தப்போவது யார்? ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங்!

பிளே ஆஃப் ரேஸில் முந்தப்போவது யார்? ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்று சிஎஸ்கே பவுலிங்!

ச. முத்துகிருஷ்ணன்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூரு ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூரு ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியும் மோதுகின்றன. தொடர் தோல்விகளில் சிக்கி திணறிய சென்னை அணி ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தான் முதல் வெற்றியை ருசித்தது. எனவே இந்தப் போட்டியிலும் பெங்களூரு அணியை சிஎஸ்கே சிங்கங்கள் வீழ்த்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த போட்டியில் சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைமை ஏற்ற தோனி, வலுவான சன்ரைசர்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக வழி நடத்தி அணியை வெற்றி வாகை சூட வைத்தார்.

தொடர்ந்து சொதப்பி வந்த ருதுராஜ் தனது SPARKக்கான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதேபோல டேவான் கான்வேவும் கடந்தப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி, தீக்ஷனா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக மிட்சல் சாண்ட்னர், ஜடேஜா ஆகியோரும் கைகொடுத்தால் வெற்றி நிச்சயம். சிஎஸ்கேவுக்கு இந்த சீசனில் கவலை தரும் விஷயமாக இருப்பது பீல்டிங் மட்டுமே. லட்டு போன்ற ஏராளமான கேட்சுகளை கோட்டை விட்டுள்ளனர் சிஎஸ்கே வீரர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 9 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். இதனால், இன்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி மட்டுமல்ல, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கேவுக்கு மிகவும் முக்கியமானதுதான். பெங்களூரு அணி இதுவரை 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த அணி கடைசி மூன்று போட்டிகளிலும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

கடந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு தூணாக இருந்த டூபிளசிஸ், இம்முறை பெங்களூருக்கு கேப்டனாக இருக்கிறார். ஆனால் கடந்தாண்டு சிஎஸ்கேவுக்காக விளாசிய டூபிளசிஸ் தற்போது பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இதுவே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி இந்த சீசனில் முதல் அரை சதத்தை கடந்தப் போட்டியில் அடித்தார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாகவே இருக்கிறது. பெங்களூருக்கு தொடக்கத்தில் பினிஷராக வெற்றிகளை தேடிக் கொடுத்த தினேஷ் கார்த்திக், ஷபாஸ் ஆகியோரும் இப்போது சொதப்பி வருகின்றனர்.ஆனால் பெங்களூரின் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், ஹேசல்வுட், ஹர்ஷல் படேல், ஹசரங்கா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இன்று ஆர்சிபி தோல்வியடைந்தால் அவர்கள் பிளே ஆஃப் வாய்ப்பும் மங்கத் துவங்கும் என்பதால் முழு முனைப்புடன் இன்று விளையாடும். டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, மொயின் அலி, பிரட்டோரியஸ், தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி.

ஆர்சிபி அணி: ஃபாஃப் டு பிளசிஸ், விராட் கோலி, ரஜத் பட்டிதர், மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சிராஜ், ஹேசல்வுட்.