டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த சாதனை நாயகன் இந்த முறையும் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக் என தொடர்ந்து அசத்திக்கொண்டே இருக்கிறார். அவர் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் நிச்சயம் இரண்டாவது தங்கமே கிடைத்துவிடும்.
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற மகத்தான சாதனை படைக்க சிந்துவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. வெள்ளி, வெண்கலம் இரண்டையும் வென்றுவிட்ட அவர் தங்கத்தையும் வென்றுவிட்டால் ஹாட்ரிக் முழுமையானதாக அமைந்துவிடும். காயத்தால் அவதிப்படும் அவருக்கு இத்தொடர் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் உலக அரங்கில் சவால்களை உடைக்கும் அவர் இம்முறையும் அதைச் செய்வார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று அசத்திய மீராபாய் சானு இந்த முறையும் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. சீன வீராங்கனை வெல்வது உறுதி என்ற நிலையில், வடகொரியா, ரஷ்யா அணிகள் பங்கேற்கப்போவதில்லை என்பதால் மீராபாய் சானுவுக்கு போட்டி குறைவு தான். ஆனால் காயத்திலிருந்து அவர் மீண்டு முழுத் திறனுடன் செயல்படவேண்டும். அதுதான் அவருக்கு இருக்கும் சவால்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு டோக்கியோவில் அசத்திய இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி இந்த முறையும் பதக்கம் வென்று அசத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய அணி அனுபவம், இளமை அனைத்தும் கலந்து விளங்குகிறது. துடிப்போடு ஆடும் இந்திய வீரர்கள் நிச்சயம் பெரும் தாக்கம் ஏற்படுத்துவார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றுமொரு சாம்பியன் லவ்லினா. இம்முறை 75 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி வென்றவர், 2023 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். எடைப் பிரிவு மாறிய பிறகு இன்னும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அசாம் வீராங்கனை நிச்சயம் தன்னுடைய இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லக்கூடும்.
பல ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களை சந்தித்த பிறகு ஒரு வழியாக ஒலிம்பிக் அரங்கில் கால் பதிக்கப்போகிறார் நிகாத் சரீன். 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் இந்த இரு முறை உலக சாம்பியன், தன் பிரிவில் இருக்கும் பல்வேறு வீராங்கனைகளை முன்பு சந்தித்து வீழ்த்தியிருக்கிறார். மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் அவரால் மேரி கோம் வழியில் ஒலிம்பிக் பதக்கம் நிச்சயம் வெல்ல முடியும்.
இந்தியாவின் மிகப் பெரிய பதக்க நம்பிக்கை இந்த இருவரும் தான். ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 அந்தஸ்த்தை அடைந்த இவர்கள், எவ்வளவு பெரிய ஜோடியாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று சவால் கொடுக்கிறார்கள். நாக் அவுட் சுற்றில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இறுதிப் போட்டி வரை அவர்களால் முன்னேற முடியும்.
துப்பாக்கி சுடுதலில் பல்வேறு வீரர்கள் இருந்தாலும், அதிக நம்பிக்கை கொடுப்பது சிஃப்ட் கௌர் சம்ரா தான். 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் பிரிவில் அசத்துகிறார் இவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்த இளம் வீராங்கனை அந்தப் பிரிவில் உலக சாதனையையும் தன் வசம் வைத்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் பங்கேற்கிறார். இரண்டு பிரிவுகளில் நிச்சயம் அவர் ஒன்றிலாவது பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக சோபிக்காமல் இருந்த அவர், ரியோ உலகக் கோப்பையில் தங்கம் வென்று மீண்டும் தன் சிறந்த ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். டோக்கியோவில் தவறியது நிச்சயம் பாரிஸில் தவறாது.
தொடர்ந்து ஒலிம்பிக் அரங்கில் காயங்களால் அவதிப்பட்டு பதக்க வாய்ப்பை இழந்துகொண்டே இருக்கிறார் வினேஷ். ஆனால் இம்முறை முன்பை விட அதிக வேட்கையோடு 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் களம் காண்கிறார் அவர். தன் ஃபிட்னஸை சிறப்பாக மேம்படுத்தியிருக்கும் வினேஷ் இந்தப் பிரிவில் பல வீராங்கனைகளையும் முன்பு வீழ்த்தியிருக்கிறார். பாரிஸ் நிச்சயம் அவருக்கு அதிர்ஷ்டத்தைப் பரிசளிக்கும் என்று நம்பலாம்.