விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்திய அணியின் சறுக்கல் ஆரம்பித்த புள்ளி இதுதான்..!

மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்திய அணியின் சறுக்கல் ஆரம்பித்த புள்ளி இதுதான்..!

jagadeesh

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி நேற்று மெல்பர்ன் நகரில் நடந்து முடிந்தது. இந்திய மகளிர் அணியை எளிதாக வென்ற ஆஸ்திரேலியா 5-ஆவது முறையாக டி20 கோப்பையை கைப்பற்றியது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வெற்றிகளை தன் வசமாக்கிய இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது எப்படி, இறுதிப் போட்டியில் சறுக்கல் எங்கே தொடங்கியது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இறுதிப் போட்டியின் முதல் ஓவரிலேயே இந்திய மகளிர் அணியின் சறுக்கல் தொடங்கியது எனக் கூறலாம். ஆம், முதல் ஓவரின் முதல் பந்தையே "ஃபுல் டாஸ்" வீசினார் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா, அதனை எளிதாக பவுண்டரிக்கு விரட்டினார் ஹீலி. முதல் ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுத்தனர் ஆஸி வீராங்கனைகளான மூனியும், ஹீலியும். ஆஸியின் இரு வீராங்கனைகளும் இந்திய பந்துவீச்சை சிதறடித்தினர். இந்திய பவுலிங்கில் புதுமையான முயற்சிகள் ஏதும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருந்தது.

மிக முக்கியமாக வேகப்பந்து வீச்சு, ஆஸி வீராங்கனைகளிடம் கொஞ்சமும் எடுபடவில்லை. உதாரணத்துக்கு 11-ஆவது ஓவரை வீசிய ஷீகா பாண்டே 23 ரன்களை கொடுத்தார். அந்த ஓவரில் மட்டுமே 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஹீலி. இந்தத் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்பட்ட பூனம் யாதவின் சுழலும், இந்தியாவுக்கு பலனளிக்கவில்லை. இதே பூனம் யாதவ்தான், ஆஸ்திரேலியாவுடனான லீக் போட்டியில் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

பவுலிங் சுமாராக இருந்தாலும் பீல்டிங் பிரமாதமாக இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பது கிரிக்கெட்டின் அடிப்படை. ஆனால் நேற்றையப் போட்டியில் இந்தியாவின் பீல்டிங் படுமோசமாக இருந்ததது. ஆட்டத்தின் முதல் ஓவரின் 5-ஆவது பந்தை ஹீலி தூக்கி அடித்தார். ஆனால் அந்தக் கேட்சை ஷபாலி வர்மா பிடிக்கத் தவறினார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. தொடர்ந்து விளையாடிய ஹீலி 75 ரன்கள் எடுத்தார். இதற்கடுத்து 4-ஆவது ஓவரில், மூனியின் கேட்சையும் கோட்டைவிட்டார் இந்திய வீராங்கனை ராஜேஷ்வரி கெய்க்வாட். இதற்கடுத்து மூனியும், ஹீலியும் இணைந்து 115 ரன்களை குவித்தனர். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

இந்தியாவின் பேட்டிங் நட்சத்திரங்கள் ஸ்மிரிதி மந்தனாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடவில்லை. இந்தத் தொடரின் பேட்டிங் ஸ்டார் என்றால் 16 வயதான ஷபாலி வர்மா. அவரை மட்டுமே நம்பி இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியதுபோல தோன்றியது. உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய ஷபாலி கடைசிப் போட்டியில் 2 ரன்களில் அவுட்டானர். இதற்கடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிஜஸ், மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் விரைவாக ஆவுட்டாகினர். இந்தியா அப்போது 30 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. நேற்றையப் போட்டியில் தீப்தி மட்டுமே 33 ரன்களை எடுத்தார்.

மொத்தமாக சுமாரான பவுலிங், படுமோசமான பீல்டிங், அனுபவமில்லாத பேட்டிங் முக்கிய வீராங்கனைகளின் "அவுட் ஆஃப் பாஃர்ம்" இந்தியாவின் இறுதிப் போட்டி தோல்விக்கு காரணமாக அமைந்தது.