விளையாட்டு

ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பை கேட்டு கண்ணீர் விட்ட கோலி - மீள் நினைவுகள்

ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பை கேட்டு கண்ணீர் விட்ட கோலி - மீள் நினைவுகள்

JustinDurai

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த செய்தியை கேட்டு தாம் அழுதுவிட்டதாக விராட் கோலி கூறியதை மறந்திருக்க முடியாது.

2014-இல் இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதல் டெஸ்டில் அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால், அடிலெய்ட் டெஸ்டில் விராட் கோலி முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தினார். அந்தத் தொடரில்தான் பாதியிலேயே தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க, முழுநேர கேப்டன் ஆனார் கோலி.

ஏறக்குறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு அப்பொறுப்பை துறந்திருக்கிறார். இச்சூழலில் 2015 ஆம் ஆண்டு விராட் கோலி அளித்த பத்திரிகை பேட்டி ஒன்றில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த செய்தியை கேட்டு அழுதுவிட்டதாக விராட் கோலி தெரிவித்திருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

அந்த பேட்டியில் விராட் கோலி கூறியிருப்பதாவது:-"கிரிக்கெட் வாரியத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னை கேப்டன் ஆக்க முடிவு செய்திருப்பதாக அப்போது என்னிடம் வாரிய நிர்வாகிகள் தெரிவித்தனர். உண்மையாக சொல்கிறேன், நான் இப்போது டெஸ்ட் கேப்டனாக வருவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை. உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டேன். கொஞ்சம் அமைதியான பிறகு நான் என் அறைக்குச் சென்றேன். அந்தத் தொடரைப் பார்க்க வந்திருந்த அனுஷ்கா அங்கே இருந்தார், நான் அவரிடம் செய்தியைச் சொன்னேன். திடீரென்று இது எப்படி நடந்தது என்று அவருடைய உணர்வுகளும் கலந்தன. தோனி ஏன் இப்படி செய்தார் என இருவரும் பேசிக்கொண்டோம்.

இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருக்கப் போகிறேன், அதுவும் நிரந்தரமாக என்ற விஷயத்தை அறிந்ததும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டுவிட்டேன். ஏனென்றால் இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.