2018இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஷர்துல் தாக்கூர், தனது வீட்டுக்குச் செல்ல மும்பை மின்சார ரயிலில் பயணித்தார். வழக்கமாக அதில் சென்று வந்தாலும், இந்த முறை அவருக்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாகப் பந்து வீசியவர் ஷர்துல் தாக்கூர். தென் ஆப்பிரிக்க வீரர்களின் 7 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றிய சாதனையை முதல் முறையாகப் படைத்துள்ளார் ஷர்துல். இந்தப் போட்டி என்றில்லை, டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் சொற்பமான ஆட்டங்களிலும் முக்கியமான விக்கெட்டுக்களை வீழ்த்தி, பார்ட்னர்ஷிப்புகளை உடைத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஷர்துல்.
இதேபோலத்தான் கடந்த 2018ஆம் ஆண்டில் ஷர்துல் தாகூர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். இதில், சிறப்பாகப் பந்துவீசிய அவர், கடைசிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். டி20 தொடரிலும் சிறப்பாகப் பந்துவீசியதால், அடுத்து நடைபெற்ற முத்தரப்புத் தொடரிலும் ஷர்துல் இடம்பெற்றார்.
அச்சமயத்தில் தொடர் முடிந்து தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய அவர், தனது வீட்டுக்குச் செல்ல மும்பை மின்சார ரயிலில் பயணித்துள்ளார். வழக்கமாக அதில் சென்று வந்தாலும், இந்த முறை அவருக்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இதுதொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஷர்துல் தாகூர் அளித்த பேட்டியில், "ரயிலில் பார்த்தபோது நான்தான் ஷர்துல் என்பதை சிலர் நம்பவில்லை. சில மாணவர்கள், கூகுளில் என் படத்தைப் பார்த்துவிட்டு என்னுடன் 'செல்ஃபி' எடுத்துக் கொண்டனர். அதன்பின்தான், நான் யார் என்று அடையாளம் கண்டனர். பலரும், கிரிக்கெட் வீரர் நம்முடன் பயணிக்கிறார் என ஆச்சரியப்பட்டனர். ஆனால், கல்லூரிக் காலத்தில் இருந்து பலமுறை இந்த ரயிலில் பயணம் செய்துள்ளேன்" என்றார்.