விளையாட்டு

இந்தியன் வாலிபால் லீக்: விரைவில் முதல் சீசனுக்கான அறிவிப்பு - வாலிபால் கூட்டமைப்பு

இந்தியன் வாலிபால் லீக்: விரைவில் முதல் சீசனுக்கான அறிவிப்பு - வாலிபால் கூட்டமைப்பு

EllusamyKarthik

இந்தியாவில் பல்வேறு விதமான விளையாட்டுகளுக்கு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியன் பிரீமியர் லீக் (IPL), இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து), புரோ கபடி லீக், பிரீமியர் பேட்மிண்டன் லீக், TNPL வரிசையில் இணைய உள்ளது இந்தியன் வாலிபால் லீக். ஏற்கனவே இந்தியாவில் கடந்த 2019 வாக்கில் புரோ வாலிபால் லீக் என்ற லீக் தொடர் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் முதல் சீசன் வரும் ஜூன் - ஜூலை வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் 6 முதல் 8 அணிகள் வரை இந்த லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் எனவும் தெரிகிறது. இதில் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் விளையாடி வரும் வீரர்கள், சர்வதேச வீரர்கள் மற்றும் இந்தியாவை சார்ந்த பல்வேறு மாநிலங்களின் வீரர்கள் விளையாடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாலிபால் கூட்டமைப்பு இந்த லீகை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இதற்கு ஆசிய வாலிபால் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச வாலிபால் கூட்டமைப்பும் அங்கீகாரம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த லீக் போட்டிகள் டிஸ்கவரி பிளஸ்ஸில் லைவ் ஸ்ட்ரீம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாலிபால் விளையாட்டுக்கு இது ஒரு மிக முக்கியமான தருணம் என தெரிவித்துள்ளார் இந்திய வாலிபால் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அச்யுதா சமந்தா.