நியூசி எதிர் இலங்கை எக்ஸ் தளம்
விளையாட்டு

NZ Vs SL | 16 ஆண்டுகளுக்குப் பிறகு 6 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி.. என்ன காரணம் தெரியுமா?

Prakash J

இந்திய மண்ணில் ஆப்கானிஸ்தான் எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் மழை மற்றும் மைதானத்தின் ஈரத்தன்மை காரணமாக, ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இது, 26 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கேறியதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது முறையாக வரலாறு பதிவானது.

இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான முதல் போட்டி நாளை (செப்.18) காலே மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்த டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற இருக்கிறது. இடையில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது.

பொதுவாக, டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள்தான் நடைபெறும். ஆனால், இந்த டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆம், செப்டம்பர் 18ஆம் தேதி இந்த போட்டி தொடங்கும் நிலையில் மூன்று நாட்கள் முடிவடைந்த பிறகு நான்காவது நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் வீரர்களும் மக்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தற்போது ஓய்வுநாள் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீண்டும் டெஸ்ட் போட்டி விடப்பட்ட இடத்திலிருந்து தொடங்கப்படும்.

இதையும் படிக்க: AFG Vs NZ| 26 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட்.. என்ன காரணம்?

டெஸ்ட் வரலாற்றில் இதுபோன்று நடைபெறுவது இது முதல்முறையல்ல. இதற்குமுன்பும் சில போட்டிகள் நடைபெற்றுள்ளன. கடைசியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 2008ஆம் ஆண்டு வங்கதேசமும் இலங்கையும் டாக்காவில் மோதிய ஆட்டத்தில் ஓய்வு நாள் சேர்க்கப்பட்டது. அதற்கு காரணம் வங்கதேசத்தில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஓய்வு தினம் சேர்க்கப்பட்டது. அதேபோல், கடந்த 2001ஆம் ஆண்டு ஜிம்பாபேவும் இலங்கையும் மோதிய போட்டியிலும் ஓய்வு நாள் அளிக்கப்பட்டது.

அப்போது புத்த மதத்திற்கு, முழு நிலவு நாள் மிகவும் முக்கியமானது என்பதால் இந்த ஓய்வு நாள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஓய்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இதற்கு முன்பு இங்கிலாந்தில் பல டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு நாள் அளிக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநாட்டில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்பதால், அந்த நாளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜிம்பாப்வே| நிதியை அள்ளித்தரும் ஐசிசி.. நீர்வீழ்ச்சி அருகே அமைய இருக்கும் புதிய மைதானம்!