ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை (நவம்பர் 22) பெர்த் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் சொந்த காரணங்களுக்காக ரோகித் சர்மா விலகியுள்ள நிலையில், துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பதவியை வகிக்க உள்ளார். இதனால், நாளைய போட்டியில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக தொடக்க வீரராக கே.எல். ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வழக்கம்போல் களம் இறங்குவார். அதேநேரத்தில், காயம் காரணமாக 3-ஆம் இடத்தில் விளையாடும் சுப்மன் கில்லுக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் களமிறக்கப்படலாம். இதற்கிடையே, சுப்மன் கில்லுக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம்வீரரான நிதிஷ் குமார் ரெட்டி தனது பங்களிப்பைச் சிறப்பாக அளித்திருந்தார். குறிப்பாக, வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம்வீரரான நிதிஷ் குமார் ரெட்டி அபாரமாகச் செயல்பட்டார். 21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 74 ரன்களையும், பவுலிங்கில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வாங்கியிருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி நெருக்கடியில் இருந்தபோது களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தேர்வுக்குழுவினராலும் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கெல், நிதிஷ் ரெட்டி ஒரு இளம் வீரர். அவரிடம் பேட்டிங், பவுலிங் என்று ஆல்ரவுண்ட் திறமை உள்ளது. ஒருமுனையில் இறுக்கமாக அவரால் வீச முடியும். அவரது பந்துகள் மட்டையை நாம் நினைப்பதை விட வேகமாகத் தாக்குகின்றன. எனவே பெர்த் உள்ளிட்ட கண்டிஷனில் கொஞ்சம் ஸ்விங் உள்ளதால் நிதிஷ் ரெட்டி துல்லியமாக பந்து வீசி விக்கெட் வீழ்த்த முடியும். அவர் ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் பவுலர். ஒரு ஆல்ரவுண்டர் வாய்ப்பைப் பெறுவது பிரமாதமானது. ஒரு ஆல்ரவுண்டர் இருந்தால் அவர் வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பார். நிதிஷ் ரெட்டிதான் இந்தத் தொடரில் நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டிய வீரர் என்று நான் கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். ஒருவேளை, ஆடும் லெவனில் இறங்கி, அவர் சாதித்தால் இந்திய அணியிலும் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி கலக்கியவர் நிதிஷ். அதன்மூலம், 2024 ஐபிஎல் தொடரின் வளர்ந்துவரும் வீரர் விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.