ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றது, இந்தியாவையே உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்தியா ஒலிம்பிக்கில் ஜொலிக்க என்ன தேவை என்று தமிழக தடகள சங்க செயலாளர் லதா சேகர் விளக்கமளித்திருக்கிறார்
தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் லதா சேகர் பேசுகையில், ” தடகளத்தில் முதன்முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது, அதிலும் தங்கப்பதக்கமே வென்றுள்ளோம். இந்த வெற்றியின் மூலமாக இந்தியாவினாலும் உலக அரங்கில் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை நீரஜ் சோப்ரா விதைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு பதக்கம் வெல்லவேண்டும் என்று கடைசி நேரத்தில் நிறைய அழுத்தம் கொடுக்கப்படுவது உண்மைதான். இந்த அழுத்தத்தை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வீரர்களுக்கு அவர்களின் பயிற்சியின் போதே கொடுக்கவேண்டும். அவர்களுக்கு நல்ல வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் இந்த ஒரு பதக்கம் 10 பதக்கமாக மாறும். 130 கோடி பேர் இந்த நாட்டில் இருந்தாலும், விளையாட்டில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை என்பது மிகக்குறைவு, விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் இந்தியாவால் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்ல முடியும். இந்தியாவில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள விளையாட்டுகளில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இதற்கு அரசு சிறப்பு பயிற்சிகளை வழங்கினால் நிறைய பதக்கங்களை குவிக்கலாம். நீரஜ்கூட ஸ்வீடனில் சென்றுதான் பயிற்சி பெற்றுள்ளார். இதுபோன்ற உயர்தர பயிற்சிகளை இந்தியாவிலேயே ஏற்படுத்தினால் ஆயிரக்கணக்கான வீரர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.
நாங்கள் பயிற்சி பெற்ற காலத்தை விடவும், இப்போது சிறப்பான பயிற்சி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், உலக அரங்கில் போட்டிப்போடும் அளவில் நாம் பயிற்சியை வழங்கவேண்டும். இந்த ஒலிம்பிக் போட்டியிலும் கூட பாதி விளையாட்டு போட்டிகளில் இந்தியா கலந்துகொள்ளவில்லை, பாதி போட்டிகளுக்கான பயிற்சியாளர்களே இந்தியாவில் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் திறமையான வீரர்கள் இருந்தாலும், உலக அளவில் போட்டியிடக்கூடிய அளவில் பயிற்சியாளர்கள் இல்லை. எனவே இதிலெல்லாம் அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும்.
நீரஜ் சோப்ரா இறுதி போட்டியின் முதல் சுற்றிலேயே 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தினார், இரண்டாவது சுற்றில் 87.58 மீட்டர் என்ற அசைக்கமுடியாத சாதனையை எட்டினார். ஒலிம்பிக்கின் 6 சுற்று ஆட்டம் என்பது மிகவும் கடினமானது, அதனால்தான் நீரஜ் முதல் சுற்றிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அவரின் தங்கத்தை உறுதி செய்தது” என தெரிவித்தார்