விளையாட்டு

"அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்கள்"- இலங்கையை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ்

"அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்கள்"- இலங்கையை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ்

jagadeesh

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்றது. அதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்தது. இதில் தினேஷ் சண்டிமால் 46 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 54 ரன்னும், ஆஷென் பந்தரா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், அந்த அணியின் வீரர்கள் அடித்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் ஒரு ஓவரில் பாபியன் ஆலென் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார். இதனையடுத்து 19 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.