விளையாட்டு

ஹோப், லெவிஸ் அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் அணி 321 ரன் குவிப்பு

ஹோப், லெவிஸ் அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் அணி 321 ரன் குவிப்பு

rajakannan

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 321 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 23வது போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே டவுண்டானில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில், லெவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கெயில் 13 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர், லெவிஸ் உடன் ஹோப் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பங்களாதேஷ் வீரர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். 

அதிரடியாக விளையாடிய லெவிஸ் 70(67) ரன்கள் சேர்த்து ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பூரான் 30 பந்துகளில் 25 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஹெட்மயர் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹோப் 96(121) ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஹோல்டர் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகூர் ரஹ்மான், முகமது சாய்ஃபுத்தின் தலா மூன்று விக்கெட் சாய்த்தனர். ஷகிப் அல் ஹாசன் இரண்டு விக்கெட் சாய்த்தார்.