விளையாட்டு

கடைசி வரை போராடிய பிராத்வெயிட்: நியூசிலாந்து திரில் வெற்றி!

கடைசி வரை போராடிய பிராத்வெயிட்: நியூசிலாந்து திரில் வெற்றி!

webteam

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில், காலின் முன்ரோ ரன் எதுவும் எடுக்கமால் வெளியேறினர். இவர்கள் விக்கெட்டை காட்ரல் சாய்த்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். டெய்லர் 69 ரன்களில் ஆட்டமிழக்க, வில்லியம்சன் நிதானமாக ஆடி 124 பந்துகளில் சதமடித்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு இது இரண்டாவது சதம். அவர் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், காட்ரல் 4 விக்கெட்டையும் பிராத்வெயிட் 2 விக்கெட்டையும் கெய்ல் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

292 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர சாய் ஹோப், ஒரு ரன்னில் போல்ட் பந்தில் போல்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த பூரனையும் வீழ்த்தினார் போல்ட். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லுடன் ஜோடி சேர்ந்தார் ஹெட்மையர். இவரும் அசத்தலாக ஆடினர். அணியின் ஸ்கோர் 142 ஆக இருந்தபோது, ஹெட்மையர்
54 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சிறப்பாக விளையாடிய கிறிஸ் கெயில் 87 ரன்களை சேர்த்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பிராத்வெய்ட், அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடினார்.

ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில், தனி ஆளாக அணியின் வெற்றிக்காக போராடினார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 48 வது ஓவரில் 3 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியை விளாசினார். 82 பந்துகளில் 101 ரன்களை குவித்த அவர், 49 ஓவரில் ஆட்டம் இழந்தார். இதனால் அந்த அணியால் 286 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக போல்ட் 4 விக்கெட்டுகளும், பர்குசன் 3 விக்கெட்டுகளும், நீஷம், ஹென்றி, கிராண்ட்ஹோம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.