பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று சாதனைப்படைத்துள்ளது.
வெஸ்ட்இண்டீஸ் - பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் முறையே பங்களாதேஷ் அணி 430 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் அணி 259 ரன்னும் எடுத்தன. 171 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பங்களாதேஷ் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. கேப்டன் மொமினுல் ஹக் 115 ரன்களும், லிடன் தாஸ் 68 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றிப்பெற 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அறிமுக வீரராக முதல் முறை களமிறங்கிய கயில் மேயர்ஸ் அதிரடியாக விளையாடினார், அவருக்கு துணையாக நிக்ருமா போனரும் விளையாடினார். கயில் மேயர்ஸ் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 210 ரன்களை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிப்பெற செய்தார். இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரட்டைச் சதம் அடித்த பெருமையை மேயர்ஸ் பெற்றுள்ளார்.