நடப்பு ஐபிஎல் சீஸனில் தனது அபாரமான ஃபீல்டிங் திறனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையையும் தன் பக்கமாக திருப்பியுள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் நிக்கோலஸ் பூரான்.
கிரிக்கெட் என்றால் அதில் பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் மட்டுமே பங்கு அதிகம் என பரவலாக பலரும் எண்ணி வந்த நேரத்தில் அபாரமான ஃபீல்டிங் மூலமாகவும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை நிரூபித்தவர் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ். கிரிக்கெட் விளையாட்டின் ஆல் டைம் பெஸ்ட் ஃபீல்டர்களில் அவர் ஒருவர். தற்போது ஜான்டி ரோட்ஸ் தான் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக உள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பூரான் பவுண்டரி லைனில் ஃபீல்டிங்கை கவனித்துக் கொண்டிருந்த போது சிக்ஸருக்கு பறந்த பந்தை காற்றில் பறந்த படி பிடித்து தடுத்ததோடு நான்கு ரன்களை சேவ் செய்து அசத்தியிருப்பார். அதை டக் அவுட்டில் அமர்ந்தபடி கவனித்த ஜான்டி ரோட்ஸ், நிக்கோலஸ் பூரானின் முயற்சியை பாராட்டும் வகையில் எழுந்து நின்று தலை வணங்கியிருப்பார். ஒரே நாளில் பலரின் பாராட்டையும் பெற்ற இந்த நிக்கோலஸ் பூரான் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள Republic of Trinidad and Tobagoவை சேர்ந்தவர் நிக்கோலஸ் பூரான். சரியாக கால் நூற்றாண்டுக்கு முன்னர் அங்குள்ள கூவா நகரில் பிறந்தவர். அவரை BORN கிரிக்கெட்டர் என்றே சொல்லலாம். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டின் மீது தீரா காதல் கொண்ட பூரான், பள்ளி கிரிக்கெட்டில் தன் ஆட்டத்தின் மூலம் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தி அதன் மூலம் பதினாறு வயதினிலேயே Trinidad and Tobagoவின் அண்டர் 19 அணியில் இடம்பிடித்தார்.
விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேனான பூரான் அண்டர் 19 அணியிலும் சிறப்பாக ஆடி 2013இல் ஆரம்பமான கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ரெட் ஸ்டீல் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். அந்த சீஸனின் முதல் போட்டியில் 24 பந்துகளில் 54 ரன்களை எடுத்திருந்தார். இதில் ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.
அந்த ஒரு இன்னிங்ஸின் மூலம் அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸின் அண்டர் 19 அணியில் இடம் பிடித்தார் பூரான்.
தொடர்ந்து அமீரகத்தில் நடைபெற்ற 2014 அண்டர் 19 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி ஆறு போட்டிகளில் 303 ரன்களை குவித்திருந்தார். இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 160 பந்துகளில் 143 ரன்களை ஸ்கோர் செய்திருந்தார் பூரான்.
இப்படி டாப் கியரில் போய் கொண்டிருந்த பூரானின் கிரிக்கெட் வாழ்வில் திருப்பமாக அமைந்தது 2015இல் ஏற்பட்ட சாலை விபத்து. அந்த விபத்தில் இரண்டு கால்களிலும் பலமாக அடிபட்டு பதினெட்டு மாதங்களாக படுக்கையிலேயே கழித்தார் பூரான்.
காயம் சரியானதும் அடிப்பட்ட புலி போல கொல பசியோடு உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியவர் ரன் வேட்டையாடினர். அதன் மூலம் 2016 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரை துவக்கினார். தொடர்ந்து 2018-இல் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்த பூரான் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 25 பந்துகளில் 53 ரன்களை குவித்து இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி20 அரை சதத்தை பதிவு செய்தார். அதற்கடுத்த ஆண்டே வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் அணியிலும் இடம் பிடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 37 பந்துகளில் 58 ரன்களை குவித்ததன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் இடம் பிடித்தார். ஒன்பது ஆட்டங்களில் 367 ரன்களை தனது முதல் உலக கோப்பை தொடரில் எடுத்தார் பூரான். இதில் ஒரு சதமும், இரண்டு அரை சதங்களும் அடங்கும். இதுவரை 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பூரான் 932 ரன்களை குவித்துள்ளார்.
கடந்த 2017இல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பூரானை முப்பது லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அதன்பின் கடந்த 2019 சீஸனில் பூரானை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. பஞ்சாப் அணிக்காக 2019இல் ஏழு போட்டிகளில் விளையாடி 168 ரன்களை எடுத்தார் பூரான். அந்த சீஸனில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 48 ரன்களை குவித்திருந்தார் பூரான். நடப்பு சீசனில் கூட ராஜஸ்தான் அணிக்கு எதிராக எட்டு பந்துகளில் 25 ரன்களை பூரான் குவித்திருந்தார். இதே போல அடுத்தடுத்த ஆட்டங்களிலும் பூரான் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.