விளையாட்டு

தனஞ்செயாவின் சுழல் வீச்சு: கோலி வியப்பு!

webteam

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி போராடி வென்றது. ஒரு கட்டத்தில் இந்திய அணியை நிலை குலைய வைத்தார் பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா. அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

வெற்றிக்குப் பின்னர் அவரது பந்துவீச்சை புகழ்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, ’ இது சிறப்பான ஆட்டமாக இருந்தது. ரசிகர்களும் வீரர்களும் மகிழ்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். தனஞ்செயா, சிறப்பாக பந்துவீசினார். அவர் ஆஃப் ஸ்பின்னர் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர் கூக்ளியாக வீசி, விக்கெட்டுகளை வீழ்த்தி வியப்பில் ஆழ்த்தி விட்டார். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து விக்கெட்டுகளை எடுத்தார் அவர். அடுத்தப் போட்டியில் அவரிடம் எச்சரிக்கையாக இருப்போம்’ என்றார்.

இலங்கை கேப்டன் உபுல் தாரங்கா கூறும்போது, ’வெற்றியின் அருகில் சென்று தோற்றுவிட்டோம். இது ஏமாற்றமாக இருக்கிறது. இந்திய வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். அவர்களின் வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டபோது, அவர்களை அவுட் ஆக்க, அனைத்து விதமாகவும் முயற்சி செய்தோம். இருந்தாலும் வெற்றி கை நழுவிவிட்டது. எங்கள் பந்துவீச்சும் பீல்டிங்கும் முன்னேறியிருக்கிறது’ என்றார்.