விளையாட்டு

"சாத்தான்குளம் கொடூரத்துக்கு எதிராகக் குரல் எழுப்புங்கள்" - ஷிகர் தவான் ட்வீட் !

"சாத்தான்குளம் கொடூரத்துக்கு எதிராகக் குரல் எழுப்புங்கள்" - ஷிகர் தவான் ட்வீட் !

jagadeesh

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளான தந்தை மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த 19ஆம் தேதி பொது முடக்கத்தை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை. மனிதத் தன்மையற்ற இந்தச் செயலுக்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்து #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.