எங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டுபிளிசிஸ் தெரிவித் தார்.
உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில், பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, ஹரிஸ் சோஹைலின் அதிரடியால் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்து, தென்னாப்பிரிக்க அணி வெளியேறுகிறது.
தோல்விக்குப் பின் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ், ''நாங்கள் சரியான கிரிக்கெட்டை ஆடவில்லை. இந்த தொடர் முழுவதும் நாங்கள் எதிரணியின் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறோம். ஆனால் இந்தப் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அவர்களுக்கு அளித்துவிட்டோம். அவர்களின் ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தோல்விக்கு அவர்களின் சுழற்பந்துவீச்சு மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. நாங்கள் சிறந்த தொடக்கத்தை அளித்திருக்க வேண்டும்.
ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து, பிறகு பார்ட்னர்ஷிப்பை தொடங்கினோம். அடுத்தும் விக்கெட்டை இழந்தோம். விளையாட்டில் இது சகஜம்தான் என்றாலும் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. கடுமையாகப் பயிற்சி செய்தோம். ஆனாலும் விளையாட்டில் நம்பிக்கை முக்கியம். எங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது. நாங்கள் சிறப்பான எதிரணியுடன் விளையாடி இருக்கிறோம். இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். அவர் விதிவிலக்கானவர். அவர் எங்கள் பந்துவீச்சுக்கு தலைமை தாங்கினார். அவருக்கு மற்ற பந்துவீச்சாளர்கள் துணை நிற்கவில்லை’’ என்றார்.