விளையாட்டு

பயிற்சிப் போட்டி: பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்!

பயிற்சிப் போட்டி: பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்!

webteam

உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டியில், பாகிஸ்தான் அணியை, ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், பீல்டிங் மோசமாக அமைந்தது. பல கேட்ச்களையும் ஸ்டம்பிங் வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். இருந்தாலும் பாகிஸ்தான் அணியை, 47.5 ஓவர்களில் 262 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

பாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆஸம் 108 பந்துகளில் 112 ரன் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 44 ரன் எடுத்தார். வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. ஆப்கான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டும் ரஷித்கான், தவ்லத் ஸத்ரன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 263 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷாசத் 23 ரன்களில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார்.

ஹஸ்மத்துல்லா ஷாகிதி 74 ரன் எடுத்து ஆட்டமிழக் காமல் இருந்தார். ஹஸ்ரத்துல்லா ஸஸாய் 49 ரன்னும் முகமது நபி 34 ரன்னும் எடுத்தனர்.  பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், இமாத் வாசிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.