விளையாட்டு

ஆசியக் கோப்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷமன் நியமனம்

ஆசியக் கோப்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷமன் நியமனம்

சங்கீதா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷமனை நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தற்காலிக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, இந்திய அணியுடன் ஜிம்பாப்வே சென்றார். இதில் கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை வாஷ் அவுட் செய்து 3-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று கோப்பையை வென்றது.

இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியும் பங்கேற்கிறது. இந்தத் தொடர் வருகிற 27-ம் தேதி முதல் துவங்கி, செப்டம்பர் 11-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தநிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தற்காலிக தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷமன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் துபாய் செல்லவுள்ளார். மேலும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பிடித்த கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் ஆகிய 3 பேரும், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இடம்பெற்றுள்ளதால், அவர்களும் வி.வி.எஸ்.லக்ஷமனுடன் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் ராகுல் ட்ராவிட்டுக்கு கொரோனா சரியானதும், ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் இணைவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.