விளையாட்டு

வீரமிக்க சுதந்திரப் போராட்ட சிறுவனை தெரிந்து கொள்ளுங்கள் - சேவாக் உருக்கமான பதிவு

வீரமிக்க சுதந்திரப் போராட்ட சிறுவனை தெரிந்து கொள்ளுங்கள் - சேவாக் உருக்கமான பதிவு

webteam

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீரேந்திர சேவாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பிரபலங்கள் பலர் தங்களின் குழந்தை வடிவ புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இதிலிருந்து சற்று மாறுபட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை இட்டுள்ளார். 

அந்தப் பதிவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் குறித்து தெரிவித்துள்ளார். அதில், “குழந்தைகள் தினம் அன்று நாம் ஷாஹீத் பஜி ராவுட் என்ற சிறுவன் குறித்து தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். ஷாஹீத் பஜி ராவுட் ஓடிசாவின் நிலகந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது 12 வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஓடிசாவிலுள்ள பிரமானி நதியில் நாட்டு படகு ஒன்றை இயக்கி வந்தார். அப்போது அங்கு வந்த பிரிட்டிஷ் ராணுவப் படைகள் தங்களை நதியின் அக்கறைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

(பஜி ராவுட்)

பிரிட்டிஷ் ராணுவம் அப்போது அந்தப் பகுதியிலுள்ள இந்திய மக்களை சுட்டுக் கொன்றுள்ளதை பஜி ராவுட் நன்கு அறிந்துள்ளார். ஆகவே பிரிட்டிஷ் ராணுவத்தை நதியின் அக்கறைக்கு அழைத்து செல்லாமல் விட்டால் அவர்கள் மக்களை கொலை செய்யமாட்டார்கள் என எண்ணி அவர்களிடம் முடியாது என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவரது தலை மீது பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் பலமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த பஜி ராவுட், அந்த சமயத்திலும் நான் உயிருடன் உள்ளவரை உங்களை அக்கறைக்கு அழைத்து செல்ல மாட்டேன் எனத் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து பஜி ராவுட்டை சுட்டுக் கொலை செய்து விடுவதாக பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மிரட்டியுள்ளனர். இவர் மீண்டும் மறுக்கவே இவரை பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இவர் தனது சிறுவயதிலும் நாட்டிற்காக செய்த தைரியமான காரியத்திற்கு நான் மிகவும் தலை வணங்குகிறேன். இந்தியாவின் மிகவும் சிறு வயது சுதந்திர போராட்ட தியாகியை நாம் போற்றவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். பிரமானி நதியில் சிறுவன் பஜி ராவுட் 1938ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.