விளையாட்டு

''கோலிக்கு விதிமுறைகள் பொருந்தாதா?'' - சேவாக் சரமாரி கேள்வி!

''கோலிக்கு விதிமுறைகள் பொருந்தாதா?'' - சேவாக் சரமாரி கேள்வி!

jagadeesh

விதிமுறைகள் என்பது அனைவருக்கும் பொதுவானது அது கேப்டன் விராட் கோலிக்கு பொருந்தாதா என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அணி வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றாலும் கேப்டன் கோலி பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இது குறித்து சோனி சிக்ஸ் தொலைக்காட்சிக்கு வீரேந்திர சேவாக் பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை அலசியுள்ளார். அப்போது பேசிய அவர் "கடந்த 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து 4-வது இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால், அவரைநேற்று நடந்த டி20 போட்டியில் அமர வைத்துள்ளார் கோலி. ஸ்ரேயாஸ் ஐய்யரின் பேட்டிங்கை பற்றிப் பேசினால், கடந்த காலங்களில் டி20 போட்டிகளி்ல் சிறப்பாகவே பேட்டிங் செய்துள்ளார்" என்றார்.

மேலும் பேசிய அவர் "அப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐய்யரை அமர வைக்க ஏதேனும் காரணம் இருக்கிறதா. எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கோலியிடம் நேரடியாகச் சென்று கேட்கும் அளவுக்கு ஸ்ரேயாஸ் அய்யருக்கு கூட துணிச்சல் இருக்கும் என நான் நினைக்கவில்லை. நான் ஒன்றுமட்டும் சொல்கிறேன். விதிமுறை என்றால் அது அனைவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஆனால், அணியில் 10 வீரர்களுக்கு மட்டும்தான் விதிமுறை, கேப்டன் கோலிக்கு இல்லையா? எந்த விதிமுறையும் கோலிக்கு பொருந்தாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார் சேவாக்.

தொடர்ந்து பேசிய அவர் "பேட்டிங் வரிசையிலும் கோலி தன்னுடைய இடத்தை மாற்றிக்கொள்ளமாட்டார், தான் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்தால்கூட யாருக்கும் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்கமாட்டார், சிறிய இடைவெளி கூட கொடுக்கமாட்டார் என கோலி இருப்பது தவறானது. கன்கஸன் விதியைப் பொருத்தவரை ஜடேஜாவுக்கு பதிலாக சாஹலை தேர்வு செய்து இந்திய அணி விளையாட வைத்தது சரியானதுதான். ஜடேஜாவால் விளையாட முடியாத சூழலில்தான் சாஹல் விளையாடினார். இது இந்திய அணிக்கு கிடைத்த வாய்ப்பு. தலையில் பந்து தாக்கும்போது, அந்த வீரரால் விளையாட முடியாத சூழலில்தான் கன்கஸனை தேர்வு செய்தோம்" என்றார் சேவாக் தீர்க்கமாக.