kl.rahul x page
விளையாட்டு

கே.எல்.ராகுல் நடத்திய ஏலம்.. ரூ.40 லட்சத்திற்கு ஏலம் போன விராட் கோலியின் ஜெர்சி!

Prakash J

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி நடிகை அதியா ஷெட்டி ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, விப்லா அறக்கட்டளை சார்பில், 'கிரிக்கெட் ஃபார் சாரிட்டி' என்ற ஏலத்தை நடத்தினர்.

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஏலத்தில், சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. குறிப்பாக, இந்திய அணியின் வீரர்களான தோனி, விராட் கோலி, பும்ரா, சஞ்சு சாம்சன், ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் டிராவிட் மற்றும் வெளிநாட்டு வீரர்களான டி காக், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களின் நினைவு பொருட்களை அளித்திருந்தனர்.

இந்த ஏலத்தில் விராட் கோலியின் ஜெர்சி ரூ.40 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்திலேயே அவரது ஜெர்சி அதிகபட்சமாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து, அவருடைய கிளவுஸ் ரூ.28 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. அதேபோல் ரோகித் சர்மாவின் கையெழுத்திடப்பட்ட பேட் ரூ.24 லட்சத்திற்கும், அவரின் பேட்டிங் கிளவுஸ் ரூ.7.5 லட்சத்திற்கும் ஏலம் போயுள்ளது.

அதுபோல் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கையெழுத்திட்ட பேட் ரூ.11 லட்சத்திற்கும், கே.எல்.ராகுலின் பேட் ரூ.7 லட்சத்திற்கும் விலை போயுள்ளது. அதேபோல் முன்னாள் கேப்டன் தோனியின் கையெழுத்திட்ட பேட் ரூ.13 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டது.

இதையும் படிக்க: தகுதியற்ற விமானியுடன் பறந்த விமானம்... ஏர் இந்தியாவுக்கு ரூ.1 கோடி வரை அபராதம்!

மேலும், ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் கிளவுஸ் ரூ.3.8 லட்சத்திற்கும், அவரின் கிரிக்கெட் பேட் ரூ.7 லட்சத்திற்கும், ரவிச்சந்திரன் அஸ்வினின் டெஸ்ட் ஜெர்சி ரூ.4.2 லட்சத்திற்கும், தோனியின் பேட்டிங் கிளவுஸ் ரூ.3.5 லட்சத்திற்கும், விராட் கோலி கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சி ரூ.4 லட்சத்திற்கும் வாங்கப்பட்டது.

மேலும் பும்ரா கையெழுத்திட்ட இந்திய அணி ஜெர்சி ரூ.8 லட்சத்திற்கும், ஜடேஜா கையெழுத்திட்ட சிஎஸ்கே ஜெர்சி ரூ.2.4 லட்சத்திற்கும் ஏலத்தில் வாங்கப்பட்டது. அதேபோல் லக்னோ அணிக்காக ஆடிவரும் பூரனின் கிளவுஸ், டி காக்கின் கிளவுஸ், ஸ்டாய்னிஸின் பேட் ஆகியவையும் ஏலத்தில் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டது. இதன்மூலமாக மொத்தம் ரூ.1.93 கோடி பணம் திரட்டப்பட்டது.

இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல், “இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற தொகை, விப்லா அறக்கட்டளையின் செவித்திறன் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இது என் இதயத்திற்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’சம்பாதிக்க சொல்லுங்க’ - மாதம் ரூ.6 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட பெண்.. ஆலோசனை கூறிய நீதிமன்றம்! #Video