உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவை ஏற்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்ப வத்துக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதை அடுத்து, பாகிஸ்தானுடன் உலக கோப் பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியிடம் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி கேட்டபோது, ‘’பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு துணை நிற்போம். அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவை மதிப்போம்” என்றார்.