இங்கிலாந்தில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ள விராத் கோலி, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, ஜூன் மாதம் 14-ம் தேதி, பெங்களூரில் நடக்கிறது. இதற்கிடையே இந்தப் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது.
கடந்த முறை இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் விராத் கோலி சிறப்பாக செயல்படவில்லை. ‘ஆப்-ஸ்டெம்புக்கு’ வெளியே வரும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் எளிதில் அவுட் ஆனார். அப்படி இந்த முறை அவுட் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்பட்டது போல அங்கும் நன்றாக விளையாட வேண்டும் என்றும் நினைக்கிறார்.
அந்த நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்தவும் முடிவு செய்துள்ளார். இதற்காக ஐபில் போட்டி முடிந்த உடனேயே இங்கிலாந்து சென்று கவுண்டி போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார் கோலி. இதற்காக சர்ரே அணியுடன் அவர் பேசியுள்ளதாகத் தெரிகிறது. இதை பிசிசிஐ-ன் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள வீரர்களைத் தேர்வு செய்வதிலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.